ஹோம் /நியூஸ் /உலகம் /

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அடுத்தடுத்து தோல்வி!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அடுத்தடுத்து தோல்வி!

போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்

  • News18
  • 2 minute read
  • Last Updated :

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் பிரிட்டன் பிரதமரின் முயற்சிக்கு நாடாளுமன்றம் தடையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, அடுத்த மாதத்தில் தேர்தலை நடத்துவதற்கும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதனால், அடுத்தடுத்த தோல்விகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அடுத்த மாதம் 31-ம் தேதிக்குள் பிரிட்டன் வெளியேறுவதற்கான பணிகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொண்டு வருகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் தடையை ஏற்படுத்திவருவதால், ஒப்பந்தம் இல்லாமலேயே பிரிட்டன் வெளியேற அவர் முயற்சி எடுத்துள்ளார்.

இந்நிலையில், ஒப்பந்தம் இல்லாமலேயே பிரிட்டன் வெளியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மசோதாவை, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன. இதில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டுவரை நீட்டிக்கவும் வழிவகை செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு 327 பேர் ஆதரவும், 299 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனால், இந்த மசோதா, மேலவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதையடுத்து, அடுத்த மாதம் 15-ம் தேதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் கொண்டுவந்தார். இதற்கு 298 உறுப்பினர்கள் ஆதரவும், 56 பேர் எதிர்ப்பும் தெரிவித்து வாக்களித்தனர். 288 பேர் வாக்களிக்கவில்லை. மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால், இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

இதனைத் தொடர்ந்து பேசிய போரிஸ் ஜான்சன், 48 மணிநேரத்துக்கு முன்பு தேர்தலை நடத்துமாறு குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போது, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர், தற்போது மீண்டும் ஒரு முறை அவரது இருக்கையில் இல்லை. மக்களை வாக்களிக்க விடுங்கள் என்று 48 மணிநேரத்துக்கு முன்பு அவர் குரல் கொடுத்தார். தற்போது, தேர்தலை நிறுத்துங்கள், மக்கள் வாக்களிப்பதை நிறுத்துங்கள் என்று கூறுகிறார். தேர்தல் நடத்துவது ஒன்றே தீர்வு என்று நான் கருதுகிறேன். நமது நாட்டின் ஜனநாயக வரலாற்றில், தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் எதிர்க்கட்சித் தலைவராக ஜெரிமி கார்பின் உள்ளார் என்று நான் கருதுகிறேன்.

இதனிடையே, ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மசோதாவுக்கு ஆதரவாக, நாடாளுமன்றத்துக்கு வெளியே லண்டன் மேயர் உள்ளிட்ட ஏராளமானோர் கூடினர்.

First published:

Tags: BREXIT