2015ல் கொரோனா குறித்து எச்சரித்த பில் கேட்ஸ்; இன்னும் 2 பேரழிவுகள் காத்திருப்பதாக ஆருடம்!

பில் கேட்ஸ்

மனிதர்கள் தயாராகாத வேறு பேரழிவுகள் ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த பில்கேட்ஸ், இரண்டு பேரழிவுகள் இருப்பதாக குறிப்பிட்டார்.

  • Share this:
2015ம் ஆண்டிலேயே கொரோனா வைரஸ் குறித்து கணித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், மேலும் இரண்டு பேரழிவுகள் காத்திருப்பதாக ஆருடம் தெரிவித்துள்ளார்.

உலகின் பிரபல பிசினஸ் மேக்னட்டும், கொடை வள்ளலுமான பில் கேட்ஸ், தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்று குறித்து கடந்த 2015ம் ஆண்டிலேயே உலக நாடுகளை எச்சரித்தார். எனினும் அவரின் எச்சரிக்கை சீரியஸாக எடுத்துக்கொள்ளப்படாததன் விளைவை இன்று உலக நாடுகள் அனைத்தும் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் எதிர்காலத்தில் நாம் சந்திக்க இருக்கும் இரண்டு பேரழிவுகள் குறித்து பில்கேட்ஸ் தற்போது ஆருடம் கூறியிருக்கிறார்.

எபோலா வைரஸ் தாக்குதல் தொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு டெட் டாக் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அணு ஆயுதங்களை விட கண்ணுக்குத்தெரியாத வைரஸால் நமக்கு ஆபத்து காத்திருக்கிறது. சக்திவாய்ந்த ஏவுகணைக்களைக் காட்டிலும் நுண்ணிய வைரஸ்கள் ஆபத்தானவை, கோடிக்கணக்கான உயிர்களை இவை குடித்துவிடும் ஆபத்து காத்திருக்கிறது, ஆனால் இதனை எதிர்கொள்ள நாம் தயாராக இல்லை.

இதற்கான சுகாதார படை ஒன்றை தயார் செய்து வைக்க வேண்டியது அவசியது. வளரும் நாடுகளில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். எபோலா வைரஸ் காற்றில் பரவவில்லை என்பதால் தான் பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது, ஆனால் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு முறை இந்த அதிர்ஷ்டம் நமக்கு கிடைக்கும் என கூறமுடியாது என உலக நாடுகளை எச்சரித்தார். கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய 2020 மார்ச் மாதவாக்கில் பில்கேட்ஸின் இந்த வீடியோ வைரஸ் ஆக பரவியது நினைவிருக்கலாம்.

பில் கேட்ஸ்


இந்நிலையில் "Veritasium" எனும் பிரபல யூடியூப் சானலின் டெரிக் முல்லர் என்பவரிடம் சமீபத்தில் கலந்துரையாடிய பில்கேட்ஸ் தன்னுடைய தீர்க்கதரிசனத்தை விரும்பவில்லை என தெரிவித்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பே எப்படி கொரோனா போன்றதை கணித்தீர்கள் என டெரிக் முல்லர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பில்கேட்ஸ், சுவாச வைரஸ்கள் ஒவ்வொன்றாக தோன்றுகின்றன. இவை மிகவும் ஆபத்தானவை. எபோலா போன்ற தொற்றுக்காக நீங்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதே பிறருக்கும் பரவி விடுகிறது என்றார்.

மனிதர்கள் தயாராகாத வேறு பேரழிவுகள் ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த பில்கேட்ஸ், இரண்டு பேரழிவுகள் இருப்பதாக குறிப்பிட்டார்.

முதலில் பருவநிலை மாற்றம். கொரோனாவில் இறந்தவர்களைக் காட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் இனி பருவநிலை மாற்றத்தால் கூடுதலான உயிரிழப்புகள் ஏற்படும். அடுத்த பேரழிவை பற்றி பேசுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள் என குறிப்பிட்டார்.பயொ தீவிரவாதம்: சேதத்தை ஏற்படுத்த விரும்பும் ஒருவர் ஒரு வைரஸை உருவாக்க முடியும், இயற்கையாக ஏற்படும் தற்போதைய தொற்றுநோய்களைக் காட்டிலும் இது ஏற்படுத்தும் சேதம் அதிகமாக இருக்கும் என பில்கேட்ஸ் தெரிவித்தார்.
Published by:Arun
First published: