பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்னை கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் மக்களின் மனதில் விஷத்தை கலக்கும் வேலையை இம்ரான் கான் செய்வதாக அவர் கடுமையாக சாடியிருந்தார். பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்பின் இந்த பேச்சுக்கு இம்ரான் கான் கடுமையான பதிலடி வழங்கியுள்ளார்.
அவர் தனது இஸ்லாமாபாத் இல்லத்தில் அளித்த பேட்டியில், 'ஊழல் குறித்து கதைக் கதையாக கூறிவந்தவர்கள் தற்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்த பின் அரசின் செயல்பாடுகளை மட்டுமே பேச வேண்டும் எனக் கூறுகிறார்கள். பாகிஸ்தான் ஆட்சி தற்போது திருடர்களின் கைகளில் சிக்கியுள்ளது. இவர்களின் கைகளில் பாகிஸ்தான் ஆட்சி செல்வதற்கு பதிலாக நாட்டில் அணு குண்டு விழுந்திருக்கலாம். நீதிமன்றம் உட்பட அனைத்திலும் இந்த கிரிமினல்களின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை நோக்கி எனது தலைமையிலான மக்கள் பேரணியை யாராலும் தடுக்க முடியாது. 20 லட்சம் மக்களை திரட்டி உண்மையான சுதந்திரத்தை நான் பெறவுள்ளேன்.தங்களின் சொந்த பலனுக்காக 11க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து என்னை அதிகாரத்தை விட்டு நீக்கியுள்ளன என குற்றஞ்சாட்டினார்.
பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான் கான்னுக்கு எதிராக கடந்த மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்துவதாக சபாநாயகரை வைத்து இம்ரான் கான் அதிரடி நகர்வை மேற்கொண்டார். இதற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்த உச்ச நீதிமன்றத்தை நாடின. இதையடுத்து ஆட்சி கலைப்பு செல்லாது என தீர்ப்பளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நாடாளுமன்றத்தில் இம்ரான் அரசு கவிழ்ந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரிப் புதிய பிரதமாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: 3,000 அடி உயரத்தில் உலகின் மிக நீளமான தொங்கும் பாலம் திறப்பு
தனது ஆட்சி அந்நிய சதி காரணமாகவே கவிழ்க்கப்பட்டது என இம்ரான் கான் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.