Home /News /international /

பாபா கா தாபா முதல் ஒரு பீருக்கு $3,000 டிப்ஸ் வரை- 2020ம் ஆண்டில் அன்பால் மனதை நெகிழவைத்த 5 தருணங்கள்...

பாபா கா தாபா முதல் ஒரு பீருக்கு $3,000 டிப்ஸ் வரை- 2020ம் ஆண்டில் அன்பால் மனதை நெகிழவைத்த 5 தருணங்கள்...

கேரள பெண்

கேரள பெண்

டெல்லி பாபா கா தாபா முதல் கேரள மக்களின் தன்னலமற்ற ரத்ததானம் வரை 2020ம் ஆண்டில் மனதை நெகிழவைத்த 5 அழகிய தருணங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.

2020ம் ஆண்டு இப்படி இருக்குமென்று யாரும் கனவில்கூட நினைத்து பார்க்கவில்லை. அவ்வளவு இழப்புகள், வேதனைகள், துயரங்கள் என ஒரு ஆண்டை இவ்வளவு வலியோடு உலகமே கடக்கிறது என்றால் சாதாரண விஷயமல்ல. இருப்பினும், இந்த கடிமான நாட்களில் கூட மக்களிடையே வெளிப்பட்ட தன்னலமற்ற அன்புதான், அனைவரையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அந்தவகையில், டெல்லி பாபா கா தாபா முதல் கேரள மக்களின் தன்னலமற்ற ரத்ததானம் வரை 2020ம் ஆண்டில் மனதை நெகிழவைத்த 5 அழகிய தருணங்கள் இவை தான்..

பாபா கா தாபா

டெல்லி, மால்வியா நகரில் சாலையோர உணவுக்கடை நடத்தி வந்த 80 வயதான கந்த பிரசாத் மற்றும் அவரது மனைவி பாதாமிதேவி. கொரோனா காலத்தில் தங்களின் கடையில் போதிய வியாபாரம் இல்லாமல் தவித்து வருவதாக கண்ணீர் மல்க அழுதனர். அவர்கள் இருவரும் கண்ணீர்விட்டு அழுத வீடியோ இணையத்தில் வேகமாக பரவி பலரின் மனதையும் கரைத்தது. இதனையடுத்து, டெல்லிவாசிகள் ஏராளமானோர் அவர்களின் கடைக்கு சென்று வயதான தம்பதிக்கு ஆதரவு அளித்தனர்.

இதனால், நல்ல வருமானத்தை ஈட்டிய அந்த தம்பதி தற்போது அதே பகுதியில் புதிய ரெஸ்டாரண்ட்டையும் திறந்துள்ளனர். இந்த வீடியோவைத் தொடர்ந்து சாலையோர உணவகம் நடத்தி வருமானம் இல்லாமல் தவிக்கும் ஏராளமானோரின் வீடியோக்களை அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டனர். கேரள பார்வதி அம்மாள், அசாமின் பக்கோர் வாலி தாதி, ஆக்ராவின் கஞ்சி பதே வலா உள்ளிட்ட வியாபாரிகளும் இதனால் பயனடைந்தனர்.

கண் பார்வையற்றவருக்கு உதவிய பெண்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கேரளாவில் பார்வையற்றவருக்காக பெண் ஒருவர் உதவிய வீடியோவும் இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில், ஓடும் பேருந்தை துரத்திச் சென்று நிறுத்தும் பெண், அந்த பேருந்தை தவறவிட்ட பார்வையற்றவரை அழைத்து சென்று அந்த பேருந்திலேயே அனுப்பி வைத்தார். பார்வையற்றவருக்காக அவர் செய்த அந்த தன்னலமற்ற சேவை இணையத்தில் வேகமாக பரவியது. அந்த பெண்ணின் இந்த சேவையை பாராட்டி ஜோஸ் ஆலுக்காஸ் அவருக்கு ஒரு வீட்டை பரிசாக கொடுத்தது. மேலும் பலர் அந்த பெண்ணை மனதார பாராட்டினர்.

கேரள விமான விபத்து - ரத்ததானம் கொடுத்த மக்கள்

ஆகஸ்ட் மாதம் 190 பயணிகளுடன் துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானம், கோழிக்கோட்டின் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது. விமானம் இரண்டு துண்டாக உடைந்த அந்த கோர விபத்தில் 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, மருத்துவமனைகளில் ரத்தம் குறைவாக இருந்த செய்தி வேகமாக பரவியதால், கொரோனா பரவல், மழை என எதனையும் பொருட்படுத்தாது மருத்துவமனைக்கு சென்று ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று ரத்த தானம் வழங்கினர். கொரோனா விதிகளை பின்பற்றி மாஸ்க் அணிந்தவாறு மருத்துவமனைகளின் முன்பு ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலரையும் நெகிழச் செய்தது

ஒரு பீருக்கு $3,000 டிப்ஸ் கொடுத்த நபர்

அமெரிக்கானவில் ஒகியோ மாகாணத்தில் உள்ள நைட்டவுன் ரெஸ்ட்ராண்ட், கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக கடையை மூடுவதாக அறிவித்திருந்தது. இதனையறித்து அந்தக் கடைக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர், ஒரே பீர் மட்டும் வாங்கிவிட்டு 3 ஆயிரம் டாலரை டிப்ஸாக கொடுத்துச் சென்றுள்ளார். முதலில், தவறாக கொடுத்திருப்பார் என்று எண்ணிய கடை உரிமையாளர் அவரிடம் இது குறித்து கேட்டுள்ளளார். அதற்கு பதில் அளித்த அந்த நபர், தெரிந்துதான் கொடுத்ததாகவும், 3 ஆயிரம் டாலர் டிப்ஸை கடை ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். வாடிக்கையாளரின் இந்த செயலால் நெகிழ்ந்த கடை உரிமையாளர் அந்த செய்தியை இணையத்தில் பதிவிட்டார்.

ஆர்டர்களுக்கு பில் செலுத்திய மெக்டொனால்ட் ஊழியர்

இங்கிலாந்தில் மெக்டொனால்ட் நிறுவனத்தில் பணியாற்றும் இனியா என்ற பெண், ஒரு மாதத்துக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் ஆர்டர்களுக்கு பணம் செலுத்தியுள்ளார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் இங்கிலாந்து ஒன்று. அப்போது, கடும் பொருளாதார பிரச்சனையில் மக்கள் இருந்த நிலையில், வாடிக்கையாளர்களின் ஆர்டர்களுக்கான பில்லை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இனியா செலுத்தியுள்ளார்.  இதுகுறித்து பேசிய இனியா, வாங்குபவர்கள் நிம்மதியாக சாப்பிட்டால், கொடுப்பவர்கள் நிம்மதியாக உறங்கலாம் என தெரிவித்தார். மேலும், புகழ், ஆங்கீகாரத்துக்காக இதனை செய்யவில்லை எனக் கூறிய அவர், தன்னுடைய மனத்திருப்திக்காக இதனை செய்வதாக கூறினார். இதுபோன்ற தன்னலமற்ற செயல்கள்தான் 2020-ன் கொடூரமான பக்கத்தில் குறிஞ்சி மலர்களாக காட்சியளித்து, மக்களுக்கான நம்பிக்கையை விதைக்கின்றன.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Corona, Corona virus, YearEnder 2020

அடுத்த செய்தி