பெலாரஸ் அதிபரின் சர்வாதிகரத்துக்கு எதிராக போலந்தில் ஓங்கி ஒலிக்கும் குரல்கள்

மாதிரிப் படம்

சாமானியர்களின் குரல் சர்வாதிகாரமும் கொண்ட ஆளும் வர்க்கத்தினருக்கு கேட்காதா என எண்ணுவோருக்கு பதிலடியாக அலறும் போராட்டத்தை கையில் எடுத்திருக்கின்றனர் போலந்து வாழ் பெலாரஸ்யர்கள்.

 • Share this:
  போலந்தில் வார்சா நகரில் அமைந்திருக்கும் ஐரோப்பிய ஆணைய கட்டடத்தின் முன்பாக கூடியிருக்கிறது அந்தக் குழு. அவர்களின் மத்தியில் உரை நிகழ்த்தும் இளம்பெண் தன் உரையை முடிக்க ஒட்டுமொத்த குழுவினரும் ஒரே நேரத்தில் அலறத் தொடங்குகின்றனர்.

  ஒரு நிமிடம் நீடிக்கும் இந்த அலறலுக்குப் பின் பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பத் தொடங்குகின்றனர். ஒன்றிரண்டு முழக்கங்களின் பின்னே குரல் விம்ம, முட்டிக் கொண்டு வரும் கண்ணீரை அடக்கிக் கொண்டு தன் பின்னே நிற்கும் கூட்டத்தினரை பார்க்கிறார் அந்த இளம்பெண். உரிமை இழந்த இந்த கூட்டத்தில் சிலர் உடைகளை துறந்து நிற்க, அரை நிர்வாணமாக அலறும் இவர்களின் ஓசைக்குப் பின்னே ஜனநாயகத்தின் வேட்கை ஒளிந்து நிற்கிறது.

  1991 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் பிளவுபட்டதைத் தொடர்ந்து தனி நாடாக உருவெடுத்தது பெலாரஸ். பெலாரஸின் அதிபராக 1994 ஆம் ஆண்டு பதவியேற்றார் லுகாஷென்கோ. 26 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் இவரை ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என வர்ணிக்கின்றனர்.

  ஆட்சி மாற்றம் விரும்பிய மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில் பெலாரஸில் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதிலும் லுகாஷென்கோவே 80 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து நடைபெற்ற அடக்குமுறையில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

  இந்நிலையில் பெலாரஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தும் விதமாக போலந்தில் உள்ள ஐரோப்பிய ஆணையம் முன்பாக ஒன்றுகூடி அலறும் போராட்டத்தை தொடங்கினார் ஜனா ஷோஸ்டக்(Jana Shostak ). இந்த கட்டடத்தின் முன்பாக தினமும் ஒன்று கூடும் இவர்கள் ஒரு நிமிடம் அலறல் ஒலியெழுப்பி எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கடந்த ஆண்டு தொடங்கிய இவர்களின் அலறல் போராட்டம் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எட்டியுள்ளது. இரு நாட்களுக்கு முன் போலந்து நடிகர் பார்டோஸ் பீலேனியாவுக்கு (Bartosz Bielenia ) விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விருதைப் பெற்ற பார்டோஸ், பெலாரஸுக்காக சில நொடிகள் அலறி ஐரோப்பிய நாடாளுமன்றத்தையே ஆச்சரியப்படுத்தினார். புரட்சி வெற்றி பெறும் வரை போராட்டம் தொடரும் என கூறுகிறார் ஜனா ஷோஸ்டக். அலறல் போராட்டம் பெலாரஸின் ஆட்சியாளரை அலற வைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
  Published by:Karthick S
  First published: