ராமர் பிறப்பு... வழக்கறிஞர்கள் வாதமும்... நீதிபதிகள் தீர்ப்பும்...!

ராமர் பிறப்பு... வழக்கறிஞர்கள் வாதமும்... நீதிபதிகள் தீர்ப்பும்...!
News18
  • News18
  • Last Updated: November 10, 2019, 10:46 AM IST
  • Share this:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களின் நம்பிக்கைக்குரிய இடமா என்பதை நீதிபதிகள் பல்வேறு ஆதாரங்களுடன் விளக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் வழக்கறிஞர்களின் வாதம் மற்றும் நீதிபதிகள் அளித்துள்ள விளக்கம் என்ன? என்பதை பார்க்கலாம்.

பிரஹத் தர்மோத்ரா புராணத்தின் படி, அயோத்தி ஏழு புனித நகரங்களில் ஒன்று என பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, முஸ்லீம்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ராஜிவ் தவான், சர்ச்சைக்குரிய இடம், ராமர் பிறந்த இடம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார்.

பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று கூறுவது தவறு என்று கூறிய அவர், இதனை உறுதிப்படுத்துவதற்கு வரலாற்று ஆசிரியர்களின் அறிக்கைகளை சுட்டிக்காட்டினார். ஆங்கிலேயர் காலத்தில் எழுதப்பட்ட ஆவணங்களை கருத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் வாதிட்டார்.


இந்துக்கள் தரப்பில் வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள புனித எழுத்துக்கள் 1528-ம் ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டவை என்றும், வால்மீகி மற்றும் துளசிதாஸ் எழுதிய காவியங்களில் ராமர் அயோத்தியில் பிறந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்துக்களின் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் மிஷ்ரா, ருத்ரயமாலா, ஸ்ரீமத் நரசிங்க புராணம் ஆகிய நூல்களை ஆதாரமாக சுட்டிக்காட்டினார். அவர் ஆஜர்படுத்திய சாட்சிகளும், வாய் மொழியாக ராமர் பிறந்த இடம் அயோத்தி என்று கூறியுள்ளனர்.

அதேநேரம், புனித நூல்களும், இந்து அறிஞர்களும் எழுதியவை ராமர் ஒரு வரலாற்று நபர் என்பதை நிரூபிக்கவில்லை என்று இஸ்லாமியர்கள் தரப்பில் கூறியிருந்தாலும், வால்மீகி ராமாயணத்தின் படி, ராமர் அயோத்தியில் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.இந்துக்கள் சார்பாக ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் மஹந்த் ராம் சந்திர தாஸ், வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகளில் ராமர் பிறந்த இடம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்கந்த புராணத்தின் அயோத்தியா மஹாத்மியத்தின் படி, சர்ச்சைக்குரிய அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அரசிதழ்களின் பல இடங்களில் ராமர் பிறந்த இடத்தில்தான் 1528-ம் ஆண்டு, பாமர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்துக்கள் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இதையே முடிவான ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும், இதை மறுப்பதற்கு போதுமான ஆதாரம் முன்வைக்கப்படவில்லை என்பது நீதிபதிகளின் கருத்து.

1991-ம் ஆண்டு நான்கு வரலாற்று ஆசிரியர்கள் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டிய முஸ்லீம்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான், சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள பழமையான சமஸ்கிருத எழுத்துக்கள் குறித்து குறிப்பிடப்படவில்லை என்றும் அயோத்திய மஹாத்மியத்தின் காலம் 18-ம் நூற்றாண்டின் இறுதியே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வாதாடினார்.

ஆனால், வரலாற்று ஆசிரியர் பி.வி.கேனின், ஸ்கந்த புராணம் 7ஆம் நூற்றாண்டிற்கும் 9-ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என்று கூறிய இந்து தரப்பு வழக்கறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்ட படி ஸ்கந்த புராணம் 18 அல்லது 19-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. என்று வாதாடினார்

பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்னரே, மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் இருந்து வந்துள்ளதாகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன

சீக்கிய மதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ரஜிந்தர் சிங் என்பவர் அளித்த சாட்சியில், சீக்கிய மத குரு, குருநானக், 1510-ல் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டதாக தெரிவித்ததையும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.

இதன் மூலம் பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்னரே, பல்வேறு பகுதிகளிலிருந்து அயோத்திக்கு பக்தர்கள் வந்துள்ளது உறுதியாவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் 1858-க்குப் பிறகு அரசிதழ்களில் பல இடங்களில், பாபர் மசூதியை ராமர் பிறந்த இடத்தின் மசூதி என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

1889-ம் ஆண்டு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில், அயோத்தியில் ராமர் கோவில் மிக அழகாக அமைந்திருந்ததாகவும், அதன் அடித்தளத்தை பயன்படுத்தியே, பாபர் மசூதி கட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. ஆகவே, பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்னரே, மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் இருந்து வந்துள்ளதாகவும் நீதிபதிகள் கூறினர்

மசூதி கட்டப்பட்ட பிறகும், ராமர் பிறந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது என்ற நம்பிக்கை, தொடர்ந்து இந்துக்களிடம் இருந்து வந்துள்ளதாகவும் எனவே இது வாய்மொழியாகவும், ஆவணப்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
First published: November 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்