இந்தியாவிலிருந்து சொந்த நாடு திரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை என எச்சரிக்கை!

மாதிரி படம்

வேறு நாடுகளின் விமான வழித்தடத்தை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து நேரடியாக இல்லாமல் பிற நாடுகள் வழியாக ஆஸ்திரேலியர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

  • Share this:
இந்தியாவில் கொரோனா பரவல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கு சிறை தண்டனை அல்லது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.

கொரோனா பரவலின் 2வது அலை இந்தியாவை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவதும், பலி எண்ணிக்கை 4,000ஐ நெருங்கியுள்ளதும் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு பயணத் தடை விதித்துள்ளது. அதாவது இந்தியாவிலிருந்து தங்கள் நாடுகளுக்கும், தங்கள் நாட்டில் இருந்து இந்தியாவிற்குமான நேரடி விமானப் சேவையை ரத்து செய்துள்ளது.

அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவும் இந்தியாவுக்கு நேரடி விமான சேவையை துண்டித்துள்ளது. இருப்பினும் வேறு நாடுகளின் விமான வழித்தடத்தை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து நேரடியாக இல்லாமல் பிற நாடுகள் வழியாக ஆஸ்திரேலியர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் கூட இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜப்மா, கனே ரிச்சர்ட்சன் ஆகியோர் இந்தியாவிலிருந்து நேரடியாக இல்லாமல் வேறு நாட்டின் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பியதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்தும் இந்தியாவுக்கு 14 நாட்களுக்குள் சென்று திரும்பிய யாரும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யக் கூடாது என அந்நாடு அறிவித்துள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கள் சொந்த குடிமக்களே ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது, சிறை தண்டனை அல்லது $66,000 என்ற கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த புதிய விதிமுறை நாளை மே 1 முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட SARS-CoV-2 என்ற வகை கொரோனா வைரஸ் அங்கு பரவிவிடக்கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த முடிவை ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அரசின் கூற்றுப்படி இந்தியாவில் 9,000 ஆஸ்திரேலியர்கள் வசித்து வருகின்றனர், இவர்களில் 600 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியா மற்றும் பிற நாடுகளில் சிக்கித்தவிக்கும் ஆஸ்திரேலியர்களை எந்த வகையில் மீண்டும் அனுமதிக்கலாம் என ஆஸ்திரேலிய அரசு ஆலோசித்து வருகிறது எனவும் சொல்லப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: