Home /News /international /

செயற்கை கண்கள் மூலம் இழந்த பார்வையை திரும்ப கொண்டு வந்த ஆராய்ச்சியாளர்கள்!

செயற்கை கண்கள் மூலம் இழந்த பார்வையை திரும்ப கொண்டு வந்த ஆராய்ச்சியாளர்கள்!

செயற்கை கண்

செயற்கை கண்

ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் (USYD) மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (UNSW) ஆகியவை இணைந்து செய்த ஆய்வில் பயோனிக் என்கிற செயற்கை கண்களை கொண்டு இழந்த பார்வையை மீண்டும் பெற முடியும் என்பதை கண்டறிந்துள்ளனர்.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து உணர கண்கள் மிக முக்கியமானவை. கண்கள் இல்லையென்றால் நமது உலகம் இருட்டாகி விடும். பிறவியிலேயே பார்வை இழந்த பலருக்கு உலகம் எப்படி இருக்கும் என்பதை உணர்வது கடினம். அதே போன்று பிறக்கும்போது பார்வை இருந்தும் தவறுதலாக ஏதேனும் விபத்தில் பார்வையை இழந்தவர்களின் நிலை இன்னும் கொடுமையானது.

இழந்த பார்வையை எப்படி மீட்பது என்கிற ஆய்வை பல ஆண்டுகளாக ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் (USYD) மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (UNSW) ஆகியவை இணைந்து செய்த ஆய்வில் பயோனிக் என்கிற செயற்கை கண்களை கொண்டு இழந்த பார்வையை மீண்டும் பெற முடியும் என்பதை கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வை பல ஆண்டுகளாக இரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வடிவமைத்த இந்த பயோனிக் கண்ணை “Phoenix 99" என்று அழைக்கின்றனர். பார்வை இல்லாதவர்கள் மற்றும் தீவிர பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த செயற்கை கண்ணை கொண்டு இழந்த பார்வையை கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கின்றனர்.இந்த பயோனிக் கண்ணானது தற்போது பார்வை இழந்தவர்களுக்கு பொருத்தி அவர்களை சோதனை செய்கின்ற முயற்சியில் உள்ளது. முக்கியமாக இந்த பயோனிக் கண் சாதனத்தை கொண்டு மூளையை தூண்டி இருக்கும் பொருட்களை கண்டறிய முடியும் என்றுள்ளனர். இதனைச் சுற்றியுள்ள திசுக்களில் இருந்து எதிர்பாராத எதிர்வினைகள் எதுவும் வரவில்லை, மேலும் இது பல ஆண்டுகளாக பாதுகாப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ALSO READ |  உலக திருநங்கை அழகிப் பட்டம் வென்ற கேரளாவின் ஸ்ருதி சித்தாரா

இந்த கண்ணின் ரெட்டினா பகுதி ஒளியை உள்வாங்கி கொண்டு அவற்றை மூளைக்கு எலெக்ட்ரிக்கல் சிக்னலாக அனுப்பும். இந்த "பீனின்ஸ் 99" சாதனம் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ள நியூரான்களுக்கு நேரடியாக கேமராவிலிருந்து மின் தூண்டுதல்களை அனுப்புவதன் மூலம் மூளையை தூண்ட செய்கிறது.

இது நோயாளியின் கண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஒரு ஸ்டிமுலேட்டர், கண்ணாடிகளுடன் இணைக்கப்பட்ட ஒரு மிகச் சிறிய கேமரா மற்றும் காதுக்குப் பின்னால் இருக்கும் ஒரு தொடர்பு மாதிரி ஆகியவற்றைக் கொண்டு இவை செய்யப்படுகிறது. "இந்த புதிய தொழில்நுட்பமானது பல ஆண்டுகளாக தனது பார்வையை இழந்து வாடும் மக்களுக்கு நிச்சயம் உதவும் என்பதில் நாங்கள் நம்பிக்கையாக உள்ளோம்" என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ALSO READ |  பறவைகளின் மீது தீராக் காதல்... கூடு வைத்து திருமணத்திற்கு அழைத்த குடும்பம்

தற்போது இவர்கள் கண்டுபிடித்த இந்த பயோனிக் கண்கள் இன்னும் பரிசோதனை முயற்சியில் உள்ளதால் மக்களுக்கு பொருத்துவதற்கு இன்னும் சில காலம் எடுத்துக்கொள்ளலாம். மேலும் இந்த அதிசய தொழில்நுட்பமானது மிக முக்கியமான மைல்கல்லாக அறிவியலில் போற்றப்படும் என்று ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தின் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் கிரெக் சுவானிங் தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ, இந்த புதுவித தொழில்நுட்பம் பலரின் வாழ்க்கையில் ஒளி மயமான வாழ்க்கையை உண்டாக்கும் என்பதில் எந்த சதேகமும் இல்லை.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Australian

அடுத்த செய்தி