வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளிலும் சாலை விபத்துக்களால் மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம், வாகன பயன்பாடுகளின் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சாலையில் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. என்ன தான் சாலை வசதிகளை வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேம்படுத்தினாலும், சாலை விதிகளை பின்பற்றாமல் போவது, அதிக செயல்திறன் கொண்ட வாகனங்களை ஆபத்தான சாலைகளில் இயக்குவது போன்ற காரணங்களாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
உலகெங்கிலும் சாலைப் பாதுகாப்பு ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலைகளை பாதுகாப்பான பயணமாக்க அரசாங்கங்கள் முயற்சி செய்கின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசாங்கம், வாகன ஓட்டுநர்களுக்கு மட்டுமின்றி சைக்கிள் ஓட்டுபவர்களும், பாதசாரிகளும் கூட பாதுகாப்பாக பயணிக்கும் வண்ணம் தனது சாலைகளை புதுமையான தொழில்நுட்பம் மூலம் புதுப்பித்து வருகிறது.
இருட்டில் ஒளிரும் சாலை அடையாளங்களை நிறுவ அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. சாலையில் உள்ள கோடுகள் பகலில் சாதாரணமாகத் தோன்றும், ஆனால் இரவில் அவை நட்சத்திரங்களைப் போலவே ஒளிரும். இதுபோன்ற சாலை பாதுகாப்பு திட்டப் பணிகளுக்காக ஆஸ்திரேலிய அரசு $245 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.
விக்டோரியா மாநிலத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவலின் படி இந்த கண்டுபிடிப்பு வாகன ஓட்டிகளுக்கு குறுக்குவெட்டுகள் மற்றும் வளைவுகள் வரை வரக்கூடிய வலுவான வரையறையை ஒளி மூலமாக எடுத்துக்காட்டும் என்றும், வரவிருக்கும் சாலை நிலைமைகளுக்கு எதிர்வினை நேரத்தை பெரிதும் மேம்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்டோரியன் நிறுவனமான டார்மாக் லைன்மார்க்கிங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருள் நிறைந்த சாலைகளில் ஒளிரும் அடையாளங்கள் பதிக்கப்பட்டுள்ள சோதனை ஓட்டம் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. சாலையின் ஓரங்கள், அடையாள பலகைகள், சாலையின் குறுக்கே செல்லும் எல்லைக்கோடுகள் என அனைத்திலும் எல்இடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒளிரும் அமைப்புகள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய தொழில்நுட்பம் பாதசாரிகள் மற்றும் பைக் பாதைகள், சாலைகள், சரிவுகள் மற்றும் பல பயன்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய சிறப்பான ஒரே தயாரிப்பாக இருக்கும் என டார்மாக் லைன்மார்க்கிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Also Read : 19 குழந்தைகளைக் கொன்ற கொடூரன்: தன் முகத்தையே பல முறை கத்தியால் குத்திக் கிழித்தவன், சிறுவயதில் கடும் கேலிக்கு ஆளானவன்
இது இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டுமல்ல, சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பாதசாரிகளுக்கும் எளிதாக இருக்கும். இந்த யோசனை உலகின் பல பகுதிகளுக்குப் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புகைப்பட-ஒளிரும் சாலைக் கோடுகளுடன், பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக குறுக்குவெட்டுகளுக்கு அருகில் எல்.ஈ.டி-லைட் நடைபாதை மற்றும் பிற பிரதிபலிப்பு சாலை அடையாளங்களையும் அரசாங்கம் செயல்படுத்த உள்ளது.
Also Read : உலகின் மிக வயதான நாய் இது தான் - கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது...
பல ஃபேஸ்புக் யூஸர்கள் டார்மாக் லைன்மார்க்கிங் வெளியிடப்பட்ட படங்களைப் பார்த்து சாலை பாதுகாப்பிற்காக அந்நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சியைப் பாராட்டி வருகின்றனர். பகல் வெளிச்சம் குறைவாக இருக்கும் நாள் அல்லது குளிர்காலம் போன்ற பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் ஒளிரும் கோடுகளின் செயல்பாடு குறித்தும் சிலர் கவலை தெரிவித்தனர். இதுகுறித்து நிறுவனத்தின் தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.