துருவப் பகுதியில் எழும் துருவ ஒளி அல்லது அரோராவால் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதாக ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
துருவ ஒளி அல்லது ஆரோரா (Aurora or northern/southern polar lights) என்பது வட, தென் துருவ பகுதிகளில் தோன்றும் ஒரு அபூர்வ ஒளித் தோற்றம். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது. இந்த ஒளித் தோற்றம், உலகம் தோன்றிய காலம் தொட்டே காணப்படுவதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த ஒளித்தோற்றமானது பொதுவாக ஆர்க்டிக், அண்டார்டிக்கா பகுதிகளில் மாலை நேரங்களில் எளிதாக காணமுடியும். வட துருவத்தில் தோன்றும்போது வடதுருவ ஒளி எனவும், தென் துருவத்தில் தோன்றும்போது தென் துருவ ஒளி எனவும் அழைக்கப்படுகின்றது.
இந்த ஒளி உண்டாகும் பகுதியைப் பார்க்கும்போது வண்ணங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்கிறதோ என்ற எண்ணம் கூட ஏற்படும். அந்தளவுக்கு வண்ணக் கலவைகளின் பிரதிபலிப்பைக் காண முடியும். ஆனால், இந்த துருவ ஒளியானது ஓசோனின் மீஸோபெரிக் மண்டலத்தில் சிதைவை ஏற்படுத்த காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஓசோன் சிதைவில் துருவ ஒளியின் பங்களிப்பும் இருக்கலாம் என கருதும் அவர்கள், உலகளாவிய காலநிலை மாற்றத்துக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டின் நாகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் யோஷிசூமி மியோஷி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு அண்மையில் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, துருவ ஒளி நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளை பகுப்பாய்வுக்குட்படுத்தினர். பூமியின் காந்த மண்டலத்தில் உள்ள எலக்ட்ரான்களுக்கும், பிளாஸ்மா அலைகளுக்கும் இடையிலான தொடர்புகளில் சிக்கிய எலக்ட்ரான்கள் பூமியின் தெர்மோஸ்பியருக்குள் நுழைவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எலக்ட்ரான்களை பெறுதல் என குறிப்பிடப்படும் இந்த நிகழ்வால் வானில் அரோரா உருவாக காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், மீசோஸ்பெரிக் ஓசோன் அடுக்கு சிதைவை ஏற்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், இந்த நிகழ்வுகள் காலநிலை மாற்றத்துக்கு நேரடியாக பங்காற்ற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறியுள்ளனர். 2017 ஆம் ஆண்டு ஸ்காண்டிநேவியத் தீபகற்பத்தில் மிதமான புவி காந்தப் புயல் ஏற்பட்டது. அப்போது, பேராசிரியர் மியோஷி தலைமையிலான குழுவினர் ஐரோப்பிய இன்கோஹெரென்ட் ஸ்கேட்டர் (EISCAT) ரேடார், ஜப்பானிய விண்கலமான அரஸ் மற்றும் ஆல்-ஸ்கை கேமரா நெட்வொர்க் ஆகியவற்றின் உதவியுடன், அப்பகுதியில் எழுந்த ஒரு மங்கலான அரோராவை ஆய்வுக்குட்படுத்தினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதில், காந்த மண்டலத்தில் உள்ள எலக்ட்ரான்கள் ஆற்றலை வெளியிடுவதை கண்டுபிடித்துள்ளனர். எலக்ட்ரான்களின் பரந்த ஆற்றல் பரப்பினால், பிளாஸ்மா அலைகள் மழைப்பொழிவை ஏற்படுத்துவதையும் அவதானித்த அவர்கள், எலக்ட்ரான்கள் வளிமண்டலத்தில் 60 கிலோமீட்டர் உயரம் வரை செல்ல போதுமான ஆற்றலைக் கொண்டுள்ளன என்பதையும் அறிந்து கொண்டனர். எலக்ட்ரான் செல்லும் அந்த இடத்தில் மீசோஸ்பெரிக் அடுக்கு உள்ளதையும், அதன் ஆற்றல் குறைப்பதையும் கண்டுபிடித்தனர்.
இதன் மூலம் ஓசோன் படலத்தின் ஆற்றல் குறைவு கண்டறியப்பட்டுள்ளதால், துருவப் பகுதியில் எழும் ஆரோரா ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதன் பின்புலத்தில் காலநிலை மாற்றத்துக்கான பாதிப்பு இருப்பதால், இது குறித்து இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.