‘நலமா மோடி ’ நிகழ்ச்சியில் ‘எல்லோரும் சவுக்கியம்’ என தமிழில் பேசிய பிரதமர் மோடி

உலக அரசியலை நிர்ணயிக்கும் நபராக ட்ரம்ப் திகழ்வதாகவும், அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலிமை மிக்கதாக மாற்றியவர் ட்ரம்ப் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்

‘நலமா மோடி ’ நிகழ்ச்சியில் ‘எல்லோரும் சவுக்கியம்’ என தமிழில் பேசிய பிரதமர் மோடி
நரேந்திர மோடி
  • News18
  • Last Updated: September 23, 2019, 8:30 AM IST
  • Share this:
பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கு உறுதுணையாக அமெரிக்கா இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒருவார பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார். பிரதமர் வருகையை முன்னிட்டு அங்குள்ள என்.ஆர்.ஜி கால்பந்து மைதானத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நலமா மோடி என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது, மோடியை வரவேற்கும் விதமாக பரதநாட்டியம், குச்சிப்புடி, பஞ்சாபி உள்ளிட்ட இந்திய கலச்சாரத்தை பிரதிபலிக்கும் நடனங்களும், அமெரிக்காவின் நடன நிகழ்ச்சிகளும் வண்ணமயமாக நடைபெற்றன.

அதிபர் டொனால்டு ட்ரம்புடன் இணைந்து பிரதமர் விழா அரங்கிற்கு வந்ததும், மோடி என முழக்கமிட்டு மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேடைக்கு வந்ததும் பிரதமர் மோடி தலைவணங்கி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். இதையடுத்து, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தேசிய கீதங்கள் அடுத்தடுத்து இசைக்கப்பட்டன.
"கனவுகளை பகிருங்கள், ஒளிமையமான எதிர்காலம்" என்ற தலைப்பில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி, உலக அரசியலை நிர்ணயிக்கும் நபராக ட்ரம்ப் திகழ்வதாகவும், அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலிமை மிக்கதாக மாற்றியவர் ட்ரம்ப் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், இது ட்ரம்ப் சர்க்கார் என்றும் கூறி விழா அரங்கை அதிர வைத்தார்.

மோடியை தொடர்ந்து பேசிய அதிபர் ட்ரம்ப், 30 கோடி மக்களை இந்திய அரசு வறுமையில் இருந்து மீட்டுள்ளது. அமெரிக்காவின் உண்மையான நண்பன் இந்தியா. மோடியை தவிர வேறு சிறந்த நபரை இந்தியா பெற்றிருக்காது. விண்வெளித்துறையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். பாதுகாப்பு துறையில் இந்தியாவுடன் அதிகளவு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் விருப்பம் . புகழ்பெற்ற என்.பி.ஏ கூடைப்பந்து போட்டியை மும்பையில் நடத்த உள்ளோம். எல்லை பாதுகாப்பு பிரச்னையை அமெரிக்கா உணர்ந்துள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மற்றும் அமெரிக்க மக்களை பாதுகாக்க இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் என்று தெரிவித்தார்.

ட்ரம்பின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, முன்னேற்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு வளர்ந்துள்ளது. என்னை நலமா என்று கேட்கிறீர்கள். ஆனால், இந்தியர் அனைவரும் நலம், எல்லோரும் சவுக்கியம் என தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரதமர் பதிலளித்தார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதை விமர்சிப்பவர்களால் தங்கள் நாட்டில் நடக்கும் பிரச்னைகளைக் கூட தீர்க்க முடியாமல் இருப்பதாக பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார். சில நாடுகள் பயங்கரவாதத்தை வளர்தெடுத்து வருவதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையாக போராட வேண்டிய தருணம் இது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அமெரிக்காவில் செப்டம்பர் 9-ம் தேதி (இரட்டை கோபுரம் மீது) நடத்தப்பட்ட தாக்குதலும், மும்பையில் செப்டம்பர் 26-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் பின்னணியில் ஒரு நாடு தான் உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு அதிபர் ட்ரம்ப் உறுதுணையாக இருப்பதாகவும் மோடி கூறினார். முன்னெற்போதும் இல்லாத வசதிகளை கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளதாகவும், புதிய இந்தியாவை படைக்க இரவு பகலாக உழைத்து வருவதாகவும் மோடி கூறினார். தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரி மூலம் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளாதாகவும் தெரிவித்தார். மேலும், அதிபர் ட்ரம்பை இந்தியா வரும்படியும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

விழாவின் நிறைவாக அதிபர் ட்ரம்புடன் கைகோர்த்தபடி பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினரிடையே வலம் வந்தார். அப்போது இந்தியர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

நலமா மோடி நிகழ்ச்சியை தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு தொழில் நிறுவன தலைமை செயல் அதிகாரிகளுடனான வட்ட மேஜை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also watch

First published: September 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்