Home /News /international /

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் - மத்திய அரசுக்கு கோரிக்கை

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் - மத்திய அரசுக்கு கோரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களையும், இந்திய வம்சாவளியினரையும் மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது ராணுவப் படைகளைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து தாலிபான்கள் எளிதாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். அதனையடுத்து, தாலிபான்களின் ஆட்சிக்கு பயந்து பொதுமக்கள் பலரும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவருகின்றனர். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிறநாட்டைச் சேர்ந்தவர்களையும் அந்தந்த நாட்டு அரசுகள் விரைவாக மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியபோது, காபூல் விமான நிலையம் சுமார் ஒரு மாத காலத்துக்கு அமெரிக்க ராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து வெளிநாட்டவர்கள் மீட்கப்பட்டனர்.

    இந்திய அரசும் ஆப்கானிஸ்தான் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்தியா திரும்பினர். இந்தநிலையில், இந்தியா உலக அமைப்பு மற்றும் மனித உரிமை தொண்டு நிறுவனங்கள் பலவும் பிரதமர் அலுவலகத்துக்கும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், ‘சீக்கிய மதத் தலைவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பலவற்றுக்கும் காபூலிலிருந்து தொடர்ச்சியாக போன்கள் வருகின்றன. இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆப்கான் குடிமகன்கள் பலரும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க வேண்டும் என்று அழைப்பு வருகிறது.

    உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களில் பலரும் இந்தியா அரசின் செல்லத்தக்க வீசா வைத்திருக்கும் நிலையில் அவர்களில் பலருக்கும் இந்திய அரசின் இ-விசா இன்னும் கிடைக்கவில்லை. குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட தோராயமாக 100 இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 222 ஆப்கானிஸ்தான் குடிமகன்கள் இந்திய அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆப்கானின் இந்து, சீக்கியம் மற்றும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய அரசு இ- விசா வழங்கவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Afghanistan, Taliban

    அடுத்த செய்தி