இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராட்டிய நிலையில், அவரை பதவி விலக ராணுவ தளபதி நிர்பந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைபர் பக்துங்வா மாகாணத்தில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இம்ரான் கான், 'இந்தியாவுக்கென சுதந்திரமான வெளியுறவு கொள்கை உள்ளது. குவாட் அமைப்பில் இந்தியா இடம் பெற்றிருக்கிறது. அமெரிக்கா தடை விதித்தாலும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருளை இறக்குமதி செய்து கொள்கிறது.
ரஷ்யா உக்ரைன் இடையிலான போரில் பாகிஸ்தான் ரஷ்யாவை எதிர்க்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் என்னிடம் கேட்டுக் கொண்டது. இதற்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டேன்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரை அமெரிக்கா நடத்தியது. இதன் அடிப்படையில் நாம் 80 ஆயிரம் மக்களையும், சுமார் 100 பில்லியன் அளவு அமெரிக்க டாலரையும் இழந்தோம்' என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க - உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம்
இந்தியாவின் வெளியுறவு கொள்கையை இம்ரான் கான் பாராட்டி பேசியிருப்பது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் பாஜ்வா மற்றும் இம்ரான் கான் இடையே முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. திட்டமிடப்படாத இந்த சந்திப்பின்போது, பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ-ன் தலைவர் நதீம் அஞ்சும் பங்கேற்றார்.
இதையும் படிங்க - ரஷ்யாவுடன் ஒப்பந்தம்.. மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை அரசியலாக்க வேண்டாம் - இந்தியா எச்சரிக்கை
கூட்டத்தின்போது இம்ரான் கானை மற்ற இருவரும் கண்டித்ததாகவும், அவர் பிரதமர் பதவியிலிருந்து ராஜனாமா செய்ய வேண்டும் என்று ராணுவ தளபதி வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாக அரசியல் குழப்பம் காணப்படுகிறது. நாட்டில் அவசர நிலையை இம்ரான் கான் கொண்டுவர வாய்ப்புள்ளதாகவும், ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து கமர் பாஜ்வா நீக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்திருந்தன.
முன்னதாக இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வரும் 28-ம்தேதி நடைபெறவுள்ளது. இந்த சூழலில் இந்தியாவை பாராட்டி இம்ரான் கான் பேசியிருப்பது அவருக்கு கூடுதல் நெருக்கடியை கொடுத்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.