உலக மிஸ் திருநங்கை போட்டி - 2வது இடம் பிடித்து சாதனை படைத்த ஆர்க்கி!

ஆர்க்கி

தென் அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் 2021ம் ஆண்டுக்கான உலக மிஸ் திருநங்கை போட்டி நடைபெற்றது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமெரிக்காவில் நடைபெற்ற உலக மிஸ் திருநங்கை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஆர்க்கி 2வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தென் அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் 2021ம் ஆண்டுக்கான உலக மிஸ் திருநங்கை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 22 வயதான ஆர்க்கி கலந்து கொண்டார். போட்டியின் முடிவில் அவர் 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் உலக மிஸ் திருநங்கை போட்டியில் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். போட்டியில் வென்ற பிறகு பேசிய ஆர்க்கி, இந்தியாவில் இருக்கும் திருநங்கை சமூகத்துக்கு பெருமை சேர்த்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

மாடல் துறையில் கால் பதிக்கும்போது பல அவமானங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ள ஆர்க்கி, விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு தேடிச் செல்லும்போது திருநங்கை என்ற காரணத்துக்காக பல இடங்களில் நிராகரிக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஒருமுறை பெண் அல்ல என்பதற்காக விளம்பர நிறுவனம் ஒன்று நிராகரித்தபோது, தான் ஒரு திருநங்கை பெண் என்றும் பெண்ணுக்கு சமமானவள் என கூறியதாக தெரிவித்தார். ஆனால், அதனை ஏற்கமறுதது விளம்பரத்தில் வாய்ப்பு கொடுக்கவில்லை என ஆர்க்கி கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ஆர்க்கி, "பல்வேறு தடைகளை கடந்து கொலம்பியா மிஸ் திருநங்கை போட்டியில் கலந்து கொண்டேன். முதன்முறையாக இந்தப் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொலம்பியாவுக்கு வந்தடைந்ததும், அங்கிருந்த திருநங்கைகளை பார்த்து தனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. அப்போது, மிகப்பெரிய இனம் ஒன்றில் தானும் அங்கம் வகிக்கும் உணர்வு ஏற்பட்டது. சக போட்டியாளர்கள் மிகவும் அன்பாக பழகினர்.

இதுபோன்ற தளங்களில் தாங்கள் யார்? என்பதையும், தங்களுக்கும் திறமைகள் உள்ளது என்பதை உலகுக்கு தெரியப்படுத்த நல் வாய்ப்பாக உலக மிஸ் திருநங்கை மேடை அமைந்தது. இந்தப் போட்டிக்குப் பிறகு தன்னுள் இருந்த தாழ்வு எண்ணங்கள் முழுவதுமாக மறைந்துவிட்டது" என கூறியுள்ளார். மிஸ் திருநங்கை போட்டியில் கலந்து கொள்வது கனவுபோல் இருந்ததாகவும், அந்தப் போட்டியில் பட்டம் வென்று இருப்பது சொல்லொண்ணா மகிழ்ச்சியை அளிப்பதாகவும் ஆர்க்கி கூறியுள்ளார்.

Also read... கோக்கைன்னுக்கு அடிமையாவது போல கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதில் அடிமையாகும் மக்கள்: MIT வெளியிட்ட ஆய்வறிக்கை!

தன்னை தத்தெடுத்த குடும்பத்துக்கும், உலகம் முழுவதும் இருக்கும் திருநங்கையர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்த ஆர்க்கி, உலகம் முழுவதும் தன்னுடைய குடும்பம் இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதுவரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நேர்மறையாக எடுத்துக்கொண்டதாக ஆர்க்கி கூறியுள்ளார். தன்னுடைய வெற்றி திருநங்கையர்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கும் என்பதில் பெருமை கொள்வதாகவும், தங்கள் சமூகமும் உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக உழைக்கப்போவதாக ஆர்க்கி கூறியுள்ளார். இந்த வெற்றிக்கு பலரும் ஊக்குவித்ததாகவும், அவர்கள் அனைவருக்கும் நன்றியையும் ஆர்க்கி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஆர்க்கி 17 வது வயதில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "பள்ளி நாட்களிலேயே தனக்குள் பெண்மை இருப்பதை உணர்ந்து கொண்டேன். ஒரு கட்டத்துக்கு மேல் தன்னால் மறைத்து வாழ முடியவில்லை. அதனால் வீட்டை விட்டு வெளியேறினேன், குடும்பத்தினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாடலிங் துறைக்குள் நுழைவதற்கு முன்பு சமூக செயல்பாடுகளில் அதிக ஆர்வமுடன் செயல்பட்டேன். திருநங்கைகள் மீது இருக்கும் தவறான எண்ணங்களை போக்குவதற்கு பாடுபட்டேன்" எனக் கூறியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: