• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கோமாவில் இருக்கும்போது பெற்ற குழந்தை.. 3 மாதங்களுக்குப் பிறகு கண்ணீர்மல்க குழந்தையை பார்த்து நெகிழ்ந்த தாய்..

கோமாவில் இருக்கும்போது பெற்ற குழந்தை.. 3 மாதங்களுக்குப் பிறகு கண்ணீர்மல்க குழந்தையை பார்த்து நெகிழ்ந்த தாய்..

அமெரிக்காவில் கொரோனாவினால் கோமா நிலைக்கு சென்ற தாய் ஒருவர், 3 மாதங்களுக்குப் பிறகு பெற்ற குழந்தையை பார்த்துள்ளார்.

  • Share this:
அமெரிக்காவின் விஸ்கான்சின்(Wisconsin) பகுதியை சேர்ந்த கெல்சி டவுன்சென்ட் என்பவர் ( Kelsey Townsend) கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் கோமா நிலைக்கு சென்றுள்ளார். உடனடியாக, மேடிசன் நகரில் உள்ள SSM Health மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். நிறைமாத கர்ப்பிணி, கொரோனா வைரஸ் பாதிப்பு, கோமா என சிக்கலான நிலையில் அனுமதிக்கப்பட்ட கெல்சி டவுன்சென்டை அவரச சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமான உயிர்காப்பு கருவிகளுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கோமா நிலையில் இருந்த கெல்சி டவுன்சென்ட் கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி ஆபரேஷன் மூலம் குழந்தையை பெற்றெடுத்தார். உட்சபட்ச சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்த அவர், வீட்டுக்கு திரும்பி முதன்முறையாக தான் பெற்றெடுத்த 4-வது குழந்தையை கண்ணீர் மல்க பார்த்தார். கோமாவில் பெற்றெடுத்த குழந்தையை பார்த்தவுடன்,’ஐ லவ் யூ! ஐ லவ் யூ சோமச்! நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன்!’  என ஆசை ஆசையாய் கொஞ்சியுள்ளார்.

"நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டவுடனேயே எங்களுக்குள் நெருங்கிய பிணைப்பு ஏற்பட்டது. மிகப்பெரிய புன்சிரிப்புடன் என் மகள் என்னை வரவேற்றாள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என மகளை சந்தித்தவுடன் கெல்சி டவுன்சென்ட் கூறினார். அவருக்கு சிகிச்சை அளித்த எஸ்.எஸ்.எம் ஹெல்த் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஜெனிஃபர் கிரப் (Dr. Jennifer Krupp) பேசும்போது, ”கெல்சிக்கு சிகிச்சை அளித்தது மிகவும் அரிதான ஒன்று. கொரோனா வைரஸ் பாதிப்பால் கோமாவுக்கு சென்ற ஒருவர் குழந்தை பெற்றெடுத்தது, எங்கள் மருத்துவமனையில் இதுதான் முதன்முறை" எனக் கூறினார். 

மருத்துவர் தாமஸ் லிட்டில்பீஃல்டு (Thomas Littlefield) பேசும்போது, ”கெல்சிடவுன்சென்டுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தபோது, மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. அவருடைய தோல் நிறமும் மாறியது, குழந்தையை விரைவாக பெற்றெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார்” எனக் கூறினார். டிசம்பர் மாதங்களில் மாற்று நுரையீரல்கள் பொருத்த வேண்டிய நிலையில் கெல்சி இருந்ததாக கூறிய தாமஸ், பின்னர் மெல்ல அவரது உடல்நிலை தேறியதாக கூறியுள்ளார்.

கெல்சிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பேசிய அவரது கணவர் டெரக் டவுன்சென்ட், "கெல்சி பலமுறை மரணத்தின் வாயில் வரை சென்றுவந்தார். பல இரவுகள் தூங்காமல் இருந்துள்ளோம். மருத்துவர்களின் அயராத உழைப்பு மற்றும் தரமான சிகிச்சையின் காரணமாக கெல்சி இன்று உயிருடன் திரும்பியிருக்கிறார். மகிழ்ச்சியாக உள்ளது. மகளும் கெல்சியை தேடிக்கொண்டே இருந்தார்" எனத் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கையாக இருந்த டெரக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: