பனிப்புயலால் தவிக்கும் டெக்சாஸ் மக்கள்: பேரிடர் மாகாணமாக அறிவித்த அதிபர் ஜோ பைடன்

ஜோ பைடன்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பனிப்பொழிவு வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த பாதிப்பை மிகப்பெரிய பேரழிவு என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

 • Share this:
  அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர் வாட்டிவதைத்து வருகிறது. வரலாறு காணாத அளவுக்கு பனிப்புயல் வீசியதால் வீடுகள், சாலைகள் என காணும் இடமெல்லாம் உறை பனிக்குள் மூழ்கியுள்ளன. கடும் குளிரால் மின்சாரத் தேவை அதிகரித்திருக்கும் நிலையில், பனிப்பொழிவு காரணமாக மின்சார உற்பத்தி முடங்கியுள்ளது. சுமார் 30 லட்சம் மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், மின்சார விநியோகப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

  தண்ணீரும் உறைந்துபோனதால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் ஒரு கோடி பேர் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர், மின்சாரம் இல்லாததால் வீட்டிலேயே உணவு சமைக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் அனைத்தும் காலியாகி, துடைத்தெடுக்கப்பட்டதை போல காட்சியளிக்கின்றன.

  நான் சூப்பர் மார்க்கெட்டிற்கு போனேன். நான் இதனை (குடிநீர் பாட்டில்கள்) வாங்கினேன். 10 பாட்டில்கள் மட்டும் வாங்க முடிந்தது. இப்படித்தான் வாழ்கிறோம், பிரட் காலியாகிவிட்டது. பிஸ்கட் காலியாகிவிட்டது. எல்லாமே காலியாக இருக்கிறது. சூப்பர் மார்க்கெட்டே காலியாக காட்சியளிக்கிறது. மக்கள் மட்டுமே உள்ளனர். இது கடினமாக உள்ளது.

  தெருக்களில் பாயும் பனிக்கட்டிகளுடன் கூடிய நீர், படிப்படியாக பனிக்கட்டிகளாக மாறி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது. குளிரை சமாளிப்பதற்காக மெழுகுவர்த்தி ஏற்றியபோது வீடு தீப்பற்றி எரிந்தது. ஜெனரேட்டர்களில் இருந்து வெளியேறும் கார்பன் மோனாக்ஸைடு போன்றவற்றால் சுமார் 60 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, டெக்சாஸை மிகப்பெரிய பேரிடர் பாதித்த மாகாணமாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். தற்காலிக வீடுகள் அமைத்துக் கொடுப்பது, வீடுகளை பராமரிப்பது, காப்பீடு செய்யாத சொத்துக்களை இழந்தவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பது போன்ற உதவிகளை வழங்கும்படி பைடன் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, டெக்சாஸில் பனிப் பொழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனநாயக கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்சாண்டிர்யா ஒகாசியோ 21 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: