• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஆறு போர்களில் இறந்தவர்களைவிட கொரோனாவால் அதிகமானவர்களை இழந்த அமெரிக்கா!

ஆறு போர்களில் இறந்தவர்களைவிட கொரோனாவால் அதிகமானவர்களை இழந்த அமெரிக்கா!

  • Last Updated :
  • Share this:
    உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. அமெரிக்கா எதிர்கொண்ட ஆறு போர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இந்த வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம் என தெரியவந்துள்ளது.

    சீனாவின் ஊஹான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதல் உலகமெங்கும் பரவத் தொடங்கியபோது, சீன வைரஸ் என்று அதனை விமர்சித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் இன்று உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியிருக்கிறது. அங்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக இறந்தவர்களின் எண்ணிக்கையிலும் 11 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது.

    1775 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா எதிர்கொண்ட ஆறு போர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இந்த வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம். அமெரிக்க புரட்சி, 1812 ஆம் ஆண்டுப் போர், இந்தியப் போர்கள், மெக்ஸிகோ போர், ஸ்பானிய - அமெரிக்கப் போர் மற்றும் வளைகுடாப் போர் ஆகிய ஆறு போர்களில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 961. ஆனால் கொரோனா இதுவரை 10 ஆயிரத்து 941 பேரை பலி கொண்டிருக்கிறது

    பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வெறும் 15 பேர் மட்டுமே அமெரிக்காவில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் மாதத்தில் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வந்தது. ஏப்ரல் 4 ஆம் தேதியன்று அதிகபட்சமாக 34 ஆயிரத்து 196 பேருக்கு ஒரே நாளில் தொற்று ஏற்பட்டது. மார்ச் ஒன்றாம் தேதி கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் ஏப்ரல் 4 ஆம் தேதியன்று உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் 1330 பேர் மாண்டனர்.

    அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதியளவு நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். நியூயார்க்கில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பும் 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. உலகின் பிரபலமான சுற்றுலாத்தலமான நியூயார்க்கில் மக்கள் அடர்த்தி அதிகம். ஒரு சதுர மைலுக்கு 27,000 பேர் வசிக்கும் நியூயார்க்கில் தொற்று அதிகமாகப் பரவ மக்கள் அடர்த்தியே காரணம் என்கின்றனர் தொற்றுநோய் நிபுணர்கள். அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதும் நியூயார்க்கில் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக சொல்லப்படுகிறது.

    41 ஆயிரத்து 90 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 1003 பேரை இழந்து அமெரிக்காவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது நியூஜெர்ஸி மாகாணம். கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் இருக்கும் மிச்சிகன் மாகாணத்தில் 17 ஆயிரத்து 221 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. அங்கு 727 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    கலிஃபோர்னியாவில் கொரோனாவால் 16 ஆயிரத்து 342 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 385 பேர் இதுவரை வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.

    அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் லூசியானா மாகாணத்தில் 14 ஆயிரத்து 867 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு அதிகமாகும்.

     

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: