ஹோம் /நியூஸ் /உலகம் /

10,000 பேரின் வேலைக்கு ஆப்பு வைக்கும் அமேசான்.. - அதிர்ச்சியில் பணியாளர்கள்!

10,000 பேரின் வேலைக்கு ஆப்பு வைக்கும் அமேசான்.. - அதிர்ச்சியில் பணியாளர்கள்!

அமேசான்

அமேசான்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • interna, Indiaamericaamericaamericaamericaamerica

  ட்விட்டர், மெட்டா போன்ற பெரு நிறுவனங்களைத் தொடர்ந்து அமேசான் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

  எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனேயே அவர் செய்த முதல் அதிரடி நடவடிக்கை ஆட்குறைப்பு தான். அதிலும் வேலையை விட்டு ஊழியர்களை நேரடியாக நீக்காமல் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து, அவர்களாகவே வேலையை விட்டும் நீங்கும் விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டார் எலன் மஸ்க்.

  ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து மெட்டாவும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அந்த வரிசையில் இப்போது உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. வெற்றிகரமான, லாபமில்லாத பிரிவிகளில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட பத்தாயிரம் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  உலகம் முழுவதும் சுமார் பதினாறு லட்சம் ஊழியர்களை கொண்டுள்ள அமேசான் நிறுவனத்தில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், இது அந்நிறுவன வரலாற்றின் மிகப்பெரிய ஆட்குறைப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

  அமேசான் நிறுவனத்தில், அலெக்சா வாய்ஸ் சர்வீஸ், சிறு வணிகப்பிரிவு, மனித வள மேம்பாட்டு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஆட்குறைப்பு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  முடிந்த பண்டிகை கால விடுமுறையில் அமேசான் நிறுவனம் இலக்கு நிர்ணயித்த அளவிற்கு லாபம் கிடைக்கவில்லை என்பதால், இந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மிக வேகமாக வளர்ந்த ஆன்லைன் வர்த்தகம் இந்த ஆண்டு  தொடக்கத்தில் இருந்தே மிகவும் மந்தமாக இருந்து வந்தது. இதனால் போதிய லாபம் ஈட்டமுடியாமல் அமேசான் நிறுவனம் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதன் நீட்சி தான் இந்த ஆட்குறைப்பு.

  இதையும் படிங்க:  நுண்ணறிவு திறனில் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாவ்கிங்கை மிஞ்சிய 11 வயது சிறுவன்

  வாடிக்கையாளர்களுக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் ஆன்லைன் மூலம் சில்லறை வர்த்தகமாக செய்து வந்த அமேசான் உலகம் முழுவதும் வேர்ஹவுஸ்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களை கொண்டுள்ளது. நிர்ணயித்த இலக்கில் லாபத்தை பெற முடியாமல் போனதால் இந்த ஆண்டு புதிய வேர்ஹவுஸ்களை திறப்பதற்கு அமேசான் நிறுவனம் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

  கொரோனா பெருந்தொற்று காலத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அமேசான் நிறுவனத்தின் லாபம் குறைவு என்பதால், அதை ஈடுகட்ட சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்கிறார் அமேசான் நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரி ஆண்டி ஜெஸி. அமேசானின் ஆட்குறைப்பு முடிவால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். பெரிய வர்த்தக ஜாம்பவான்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் உலக அளவில் வேலை இல்லா திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கக் கூடும் என அச்சம் தெரிவிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Amazon, Job