தாலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா இறந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில் முதன்முறையாக தனது ஆதரவாளர் முன் அவர் தோன்றி உரையாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாலிபான் அமைப்பின் ஆன்மிக தலைவராக உள்ள ஹைபதுல்லா அகுந்த்சாதா, அந்த அமைப்பின் உச்சபட்ச தலைவராகவும் கருதப்படுகிறார். இவர் இறந்துவிட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தகவல் பரவியது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாததால் ஹைபதுல்லா அகுந்த்சாதா நிலை தொடர்பாக மர்மம் நிலவிவந்தது.
இந்த நிலையில், முதன்முறையாக ஹைபதுல்லா அகுந்த்சாதா பொதுமக்கள் முன்பு தோன்றியுள்ளார். தாருல் உலூம் ஹக்கிமா மதரஸாவில் ராணுவ வீரர்கள் முன்னிலையில் அவர் பேசியுள்ளார். இது தொடர்பாக வீடியோவோ, புகைப்படமோ எடுக்கப்படவில்லை. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. அங்கு எடுக்கப்பட்ட 10 நிமிட விடியோ தலிபான் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டது. தனது பேச்சின்போது அரசியல் குறித்து எதுவும் பேசாத அவர்,முழுக்க முழுக்க மதம் குறித்து மட்டுமே பேசியுள்ளார்.
தாலிபான்களின் தலைவராக இருந்த முல்லா அக்தார் மன்சூர், அமெரிக்கப் படைகளால் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, அந்த இயக்கத்தை ஹைபதுல்லா அகுந்த்சாதா வழி நடத்தி வந்தார். தாலிபான்களின் ஷரியா நீதிமன்றத் தலைவரான அகுந்த்சாதா, 1990-ஆம் ஆண்டில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய போது மத விவகாரங்களில் முக்கிய முடிவு எடுத்து வந்தார். குற்றவாளிகளாக கருதப்படுபவர்களை பொது இடத்தில் கொல்வது, பெண்களுக்கு கல்வி கற்க தடை விதித்தது போன்ற மிக கடுமையான சட்டங்களை அமல் படுத்தியவர்.
இதையும் படிங்க: எங்களை அங்கீகரிக்காவிட்டால்... உலக நாடுகளுக்கு தாலிபான்கள் விடுத்த எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றிய பின்னர் ஹைபதுல்லா அகுந்த்சாதா உச்சபட்ச தலைவராக இருப்பார் என்றும் அவருக்கு கீழ் அரசு செயல்படும் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், தாலிபான்கள் வெளியிட்ட அமைச்சரவைப் பட்டியலில் அகுந்த்சாதா பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.