ஆண் ஒருவரின் துணையின்றி ஆப்கன் பெண்கள் விமானப் பயணம் செல்வதற்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஏரியானா ஆப்கன் மற்றும் காம் ஏர் என 2 முக்கிய நிறுவனங்கள் விமான போக்குவரத்து சேவையை அளித்து வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு, பெண்கள் தனியே பயணம் செய்தால் அவர்களை அனுமதிக்கக் கூடாது என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வியாழன் அன்று தாலிபான் அரசு நிர்வாகிகள், ஏரியானா ஆப்கன், காம் ஏர் அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய உத்தரவு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு பொறுப்புக்கு வந்ததில் இருந்து பெண்களின் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. முன்பு ஆண்கள் துணையின்றி சாலைப் பயணங்களை மேற்கொள்வதற்கு தாலிபான் அரசு தடை விதித்திருந்தது.
இதையும் படிங்க - ''ரஷ்யாவை எதிர்ப்பதில் இந்தியாவுக்கு நடுக்கம் '' : ஜோ பைடன் விமர்சனம்
ஆனால், விமானப் பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1996 முதல் 2001 வரையில் தாலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் இருந்தபோது, சட்டங்கள் கடுமையாக்கப்பட்டிருந்தன. அதுபோன்ற நிலைமை தற்போது இருக்காது என்று, கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்ற தாலிபான் அரசு கூறியிருந்தது. இந்நிலையில் கட்டுப்பாடுகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி வருகிறது தாலிபான் அரசு.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.