• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • முழு ஆப்கானும் பணிந்தாலும் தாலிபான்களுக்கு எதிராக தனியாக போர் முழக்கம் எழுப்பும் பஞ்ச்ஷிர் மாகாணம் - வரலாறு என்ன?

முழு ஆப்கானும் பணிந்தாலும் தாலிபான்களுக்கு எதிராக தனியாக போர் முழக்கம் எழுப்பும் பஞ்ச்ஷிர் மாகாணம் - வரலாறு என்ன?

ஆப்கானிஸ்தான் பஞ்ச்ஷிர்

ஆப்கானிஸ்தான் பஞ்ச்ஷிர்

ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானே தாலிபான்களுக்கு அடிபணிந்து விட்ட நிலையில் ஒரே ஒரு மாகாணம் மட்டும் துணிச்சலாய் போருக்கு அழைப்பு விடுத்து வருகிறது.

  • Share this:
    ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதால் மக்களும், முந்தைய ஆட்சியாளர்களும் ஆடிப்போயிருக்கின்றனர். அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்களையெல்லாம் வைத்திருந்த ஆப்கன் படைகளே பெட்டிப்பாம்பாய் அடங்கிவிட்டன. தாலிபான்களின் தாக்குதலுக்கு பயந்து 33 மாகாணங்களும் எதிர்ப்பே இல்லாமல் மண்டியிட்டன. ஆனால் ஆப்கனில் எஞ்சியுள்ள பஞ்ச்ஷிர் மாகாணம் மட்டும் தாலிபான்களுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது. முடிந்தால் வந்துப்பார் ஒரு கை பார்ப்போம் என சவால்விட்டுள்ளனர் தீரத்துக்கு பெயர்பெற்ற பஞ்ச்ஷிர் போராளிகள்.

    ஆனானப்பட்ட சோவியத் ரஷ்யா, ஆப்கானிஸ்தான் முழுவதையும் ஆக்கிரமித்து 10 ஆண்டுகள் போரிட்டபோது கூட பஞ்ச்ஷிர் மட்டும்தான் அடிபணியவில்லை. பாரசீக மொழியில் பஞ்ச்ஷிர் என்றால் ஐந்து சிங்கங்கள் எனப் பொருள். பெயருக்கேற்பவே ஆக்கிரமிப்புக்கு அடிபணியாத சிங்கமாக பஞ்ச்ஷிர் விளங்கி வருகிறது.

    சோவியத்தையும், தாலிபான்களையும் எதிர்த்த முஜாகிதீன்களில் தீரம்மிக்க கமாண்டரான அகமத் ஷா மசூத், பஞ்ச்ஷிர் பகுதியைச் சேர்ந்தவர்தான். பஞ்ச்ஷிர் சிங்கம் என்றே அகமது மசூத் அழைக்கப்பட்டார். அவரது தலைமையில் இயங்கிய வடக்கு கூட்டணிப் படைகள் சோவியத் யூனியனுக்கும் பின்னாளில் உள்நாட்டுப் போரின்போது தாலிபான்கள் உள்ளிட்ட எந்த போராட்டக்குழுக்களுக்கும் பயந்ததுமில்லை, பணிந்ததும் இல்லை.

    தாலிபான்களுக்கு எதிராக போராடிய அகமத் ஷா மசூதுக்கு இந்தியா வெளிப்படையாகவே ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை தஜிகிிஸ்தான் வழியாக தந்துதவியது. தற்போது அகமது ஷா மசூதின் 32 வயது மகன், அகமது மசூதும் தாலிபான்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். தாங்கள் ஆயுதங்களை சேமித்து வைத்திருந்தாலும் அமெரிக்கா விட்டுச் சென்ற நவீன ஆயுதங்கள் தாலிபான்களிடம் இருப்பதால் அவர்களை முழுமூச்சாய் எதிர்க்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஆயுதங்களை தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது போதாதென தான்தான் ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபர் என சவால்விட்டுள்ள துணை அதிபர் அம்ருல்லா சலேவும் பஞ்ச்ஷிர்காரர்தான். அதுமட்டுமின்றி துணை அதிபராவதற்கு முன் கமாண்டர் அகமத் ஷா மசூதின் வலதுகரமாக திகழ்ந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது. சலேவும் பஞ்ச்ஷிரில் இருந்துதான் குரல் எழுப்பி வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பஞ்ச்ஷிர் மாகாணத்துக்கு, பல நூறு கிலோ மீட்டர் தூரம் நீளும் இந்துகுஷ் மலைத் தொடர்கள் அரணாய் காத்து நிற்கின்றன. பஞ்ச்ஷிரின் அமைவிடம், அதன் தலைவணங்காமைக்கு முக்கிய காரணமாக இருப்பதையும் மறுக்க முடியாது. பஞ்ச்ஷிர் மாகாணத்தில் இருந்து எழுந்துள்ள போர்க்குரலும் அதன் தோல்வியடையா பின்னணியும் ஆப்கன் மக்களுக்கு நம்பிக்கை கீற்றை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: