ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராகிறார் தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பராதர்

தாலிபான் தலைவர் முல்லா அப்துல் காலி பராதர்

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பராதர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், நாட்டின் பெயரை 20 ஆண்டுகளுக்கு முன்பு அழைக்கப்பட்டது போன்று ”ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்” என மாற்றியுள்ளனர். நாட்டின் புதிய அதிபராக முல்லா அப்துல் கனி பராதர் அறிவிக்கப்பட்டுள்ளார். காபூலில் உள்ள பெரும்பாலான சோதனைச் சாவடிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் தாலிபான் அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு கட்டிடங்களுக்கு எந்தவொரு சேதத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்று வீரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

  பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காது என்றும், விமான நிலையத்திலிருந்து நாட்டுக்குள் திரும்ப அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் முதல் நாளில் எந்தப் பகுதியிலும் காவல் துறையினரோ, போக்குவரத்தை கட்டுப்படுத்தும் அதிகாரிகளோ நிறுத்தப்படவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

  Also Read : ஆப்கானிஸ்தான் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய உஸ்பெகிஸ்தான்! - பயணிகள் கதி என்னவானது?

  ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தாலிபான்களுடன் நட்புறவு கொள்ள தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதேபோல, தாலிபான்களின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவங்கள் மூலம், அடிமைத்தளைகளை தாலிபான்கள் உடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  தாலிபான்களின் ஆட்சியை அங்கீகரிப்பது குறித்து அவர்களது செயல்பாடுகளைப் பொறுத்து முடிவுசெய்ய உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

  Also Read : ஆப்கான் பரிதாபம்:  விமான டயரில் தொங்கியபடி பயணம் செய்த 3 பேர் பலி- வெளியாகும் பயங்கர வீடியோக்கள்

  முன்னதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அஷ்ரப் கனி, மக்கள் ரத்தம் சிந்துவதைத் தவிர்க்கவே நாட்டைவிட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளார். ஆயுதமேந்திய தாலிபான்களை எதிர்கொள்வதா அல்லது 20 ஆண்டுகளாக பாதுகாப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தேசத்தை விட்டு வெளியேறுவதா என்ற கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். கத்தி மற்றும் ஆயுதங்கள் மூலம் வெற்றிபெற்றுள்ள தீவிரவாதிகள், மக்களின் மனங்களில் இடம் பிடிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களையும், அவர்களது சொத்துக்களையும் பாதுகாப்பது தாலிபான்களின் பொறுப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்ட நிலையில், தஜிகிஸ்தானில் தரையிறங்க அஷ்ரப் கனிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இதனால், ஓமன் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அமெரிக்காவில் அவர் தஞ்சமடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டை விட்டு வெளியேறியபோது நான்கு கார்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் முழுவதும் பணத்துடன் அஷ்ரப் கனி சென்றதாக கூறப்படுகிறது. அனைத்தையும் ஏற்ற முடியாமல், சிலவற்றை விமான நிலையத்திலேயே போட்டுவிட்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: