Home /News /international /

மக்கள் புரட்சியின் மகத்துவம் சொல்லும் மெக்ஸிகோ நகரம்: தனி சட்டம், காவல்துறையை உருவாக்கிய பொதுமக்கள்!

மக்கள் புரட்சியின் மகத்துவம் சொல்லும் மெக்ஸிகோ நகரம்: தனி சட்டம், காவல்துறையை உருவாக்கிய பொதுமக்கள்!

செரான் நகரம்

செரான் நகரம்

மெக்ஸிகோவில் வன்முறை, கடத்தல், ஊழல் எனப் பலவகையிலும் பாதிக்கப்பட்ட ஒரு நகரம், மக்கள் புரட்சியால் மெக்ஸிகோவின் பாதுகாப்பான நகரமாக மாறி இருக்கிறது. 

மெக்ஸிகோவின் மத்திய மேற்குப் பகுதியில் இருக்கும் சிறு நகரம் செரான். அப்பகுதியில் வசிக்கும் பூர்வகுடி மக்கள் பேசும் புரேபெச்சா (Purepecha) மொழியில் செரான் என்றால் பயப்படும் இடம் என்று அர்த்தம். உண்மையிலேயே சமூக விரோதிகளும், ஊழல் அரசியல்வாதிகளும் பயப்படும் இடமாகத் தற்போது மாறி இருக்கிறது செரான்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பயமும், பதற்றமும் நிறைந்திருந்த நகரமாக இருந்தது செரான். சமூக விரோதிகளும், அவர்களுக்கு ஆதரவளித்த ஊழல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் செரானை குற்றங்களின் கூடாரமாக மாற்றி இருந்தனர். போதைப்பொருள் கடத்தல், காடுகளை அழித்தல், ஆட்கடத்தல் என அன்றாடம் அரங்கேறிய குற்றச் சம்பவங்களைக் கண்டு வெதும்பிய மக்கள் ஒரு கட்டத்தில் கொதித்து எழுந்தனர்.

2011ஆம் ஆண்டு புதிய பாதையில் நடைபோடத் தொடங்கியது செரான். புரேபேச்சா மொழி, பூர்வகுடிகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மக்கள் டோனா செப்பா என்னும் பெண்மணியின் தலைமையின் கீழ் ஒன்று திரண்டனர். தங்களின் வாழ்வாதாரமான வனப்பகுதிகளில் இருந்து மரங்களைக் கடத்தி வந்த லாரிகளைத் தடுத்து நிறுத்தினர். கடத்தல் கும்பலைச் சிறைப்பிடித்து தேவாலயம் ஒன்றில் அடைத்தனர். அரசியல் கட்சிகளுக்கு இனி செரானில் இடம் கிடையாது என அதிரடியாக அறிவித்தனர். உள்ளாட்சித்துறை, காவல்துறை என அனைத்து அரசு அமைப்புகளையும் செரானிலிருந்து வெளியேற்றினர்.

பூர்வகுடிகளின் சுயாட்சி அமைப்பை மெக்ஸிகோவின் அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது. இது செரான் மக்களுக்குச் சாதகமாக அமைந்து விட 2014ஆம் ஆண்டு தங்களுக்கென 12 உறுப்பினர்கள் கொண்ட உள்ளாட்சி அமைப்பை நிறுவினர். தங்களுக்கென தனி சட்டங்களையும், அதை நடைமுறைப்படுத்த சமுதாய காவல்துறையையும் உருவாக்கினர்.

இப்போது பொது இடத்தில் குடிப்பதற்குக் கூட அங்கு சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. இதனால் மெக்ஸிகோவின் பாதுகாப்பான நகரமாக தற்போது மாறி இருக்கிறது செரான். தங்களை எப்போது வேண்டுமானாலும் சமூக விரோதிகள் தாக்கக்கூடும் என்று அறிந்திருக்கும் இவர்கள், அந்த எண்ணத்தில் உள்ளே நுழைபவர்கள் திரும்பிப் போக முடியாது; ஏனென்றால் நாங்கள் ஒன்றிணைந்திருக்கிறோம் என சினிமாவை மிஞ்சும் விதத்தில் கூறி அசர வைக்கின்றனர். தான் இப்போது காடுகளுக்குள் தனியாக நடந்து செல்ல இயலும் என்று கூறும் டோனா செப்பா தனது சமூகத்தின் குழந்தைகள் இனி பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியோடு கூறுகிறார்.

Also see:

 
Published by:Rizwan
First published:

Tags: Mexico

அடுத்த செய்தி