பாகிஸ்தானில் 2012ம் ஆண்டு பள்ளி சென்றுவிட்டுத் திரும்பிய மலாலா யூசுப் என்ற மாணவியை தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர். இறந்துவிட்டதாக நினைத்து அவர்கள் சென்றுவிட, அவருக்கு பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பெண் கல்விக்காக பேசிய சிறுமியை தாலிபான்கள் சுட்ட தகவல் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மலாலாவுக்கு இங்கிலாந்தில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது அவர் மேற்படிப்புகளை முடித்து பல அரிய செயல்களை செய்து வருகிறார். இந்நிலையில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் ஒன்று இப்போது நடந்துள்ளது.
நோபல் பரிசு பெற்ற ஆர்வலர் மலாலா யூசுப்சாயை 2012-ம் ஆண்டு தலையில் சுட்டவர்களில் ஒருவர் ட்விட்டரில் மலாலாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறான். சிறிது நேரத்தில் அகற்றப்பட்ட அந்த ட்வீட்டில், பாகிஸ்தான் முன்னாள் தலிபான் செய்தித் தொடர்பாளர் எஹ்சானுல்லா எஹ்சன் "வீட்டிற்கு திரும்பி வாருங்கள், உங்களுடன் தீர்க்க ஒரு கணக்கு உள்ளது" என்று ட்வீட் செய்துள்ளார். "இப்போது எந்த தவறும் இருக்காது" என்றும் எஹ்சன் மேலும் கூறினார். அதிர்ச்சியடைந்த மலாலா அந்த ட்வீட்டுக்கு பதிலளித்தார்.
"தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானின் முன்னாள் செய்தித் தொடர்பாளர், என் மீதும் பல அப்பாவிகள் மீதும் தாக்குதலை நடத்தி அதற்கு பொறுப்பேற்றார். அவர் இப்போது சமூக ஊடகங்களில் மக்களை அச்சுறுத்துகிறார். எனக்கு என்ன சந்தேகம் என்றால் ஜெயிலில் இருந்த நபர் எப்படி தப்பித்தார் என்பதுதான்?" என்று மலாலா எழுதினார்.
This is the ex-spokesperson of Tehrik-i-Taliban Pakistan who claims responsibility for the attack on me and many innocent people. He is now threatening people on social media. How did he escape @OfficialDGISPR@ImranKhanPTI? https://t.co/1RDdZaxprs
இதற்கு மலாலா மட்டும் அதிர்ச்சியை வெளிப்படுத்தவில்லை. ட்விட்டர் எஹ்சானின் கணக்கை அகற்றிய போதிலும், எஹ்சானுன் ட்விட்டர் கணக்கை வைத்திருக்க எப்படி, யார், அனுமதித்தது என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். கடந்த ஆண்டு பிப்ரவரியில் எஹ்சான் ஜெயிலிலிருந்து தப்பித்த செய்தி வெளிவந்தது, பல தலிபான் தாக்குதல்களுக்கு தனது குழு சார்பாக பொறுப்பேற்ற நபர், ட்விட்டரில் தான் ஜெயிலில் இருந்து தப்பித்ததாக அறிவித்தார், பின்னர் இது சம்மந்தமான ஆடியோ ஒன்று இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது.
இந்த சம்பவத்தை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் இஜாஸ் ஷா அது உண்மை தான் என்று உறுதிப்படுத்தியுள்ளார். எவ்வாறாயினும், எஹ்சானை மூன்று ஆண்டுகளாக காவலில் வைத்திருந்த பாகிஸ்தான் இராணுவம், இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. மலாலா மீதான தாக்குதலை திட்டமிட்டதற்காக மட்டுமல்லாமல், 2014ல் கொடிய பெஷாவர் இராணுவ பள்ளி பயங்கரவாத தாக்குதலை நடத்தியதற்காகவும் எஹ்சன் கடுங்காவல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜெயிலில் இருந்து தப்பித்த பிறகு எஹ்சன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியும் இந்த ட்விட்டர் கணக்கின் மூலம் தான் நிகழ்ந்தது.
அதில் உருது மொழியில் மெசேஜ்களை போஸ்ட் செய்திருந்தார். அப்போது அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ட்விட்டர் அக்கௌன்ட்கள் இருந்தன அவை அனைத்தும் இப்போது நீக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசாங்கம் இந்த அச்சுறுத்தலை விசாரித்து வருகிறது. அரசு உடனடியாக கணக்கை மூடுமாறு ட்விட்டரிடம் கேட்டுக் கொண்டது என்று பிரதமரின் ஆலோசகர் ராவூப் ஹசன் தெரிவித்தார். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசப்சாய், 2012 ல் பாகிஸ்தானில் பெண்கள் கல்விக்காக பிரச்சாரம் செய்ததால் அவரது தலையில் குண்டு பாய்ந்தது.
தாக்குதலுக்குப் பிறகு, தாலிபான்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். மலாலா யூசுப்சாய் உயிர் பிழைத்தால் அவர்கள் மீண்டும் குறிவைப்பார்கள் என்று அதில் தாலிபான்கள் குறிப்பிட்டிருந்தனர். குணமடைந்த பின்னர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியாமல், அவர் பிரிட்டனுக்குச் சென்று, மலாலா நிதியை (Malala Fund) அமைத்து, பாகிஸ்தான், நைஜீரியா, ஜோர்டான், சிரியா மற்றும் கென்யாவை மையமாகக் கொண்டு உள்ளூர் கல்வி குழுக்களுக்கு உதவி செய்து வருகிறார். தற்போது UK-இல் வசித்து வரும் யூசுப்சாய், பிரிட்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பட்டம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.