180 ஆண்டுகள் வாழ ஆசைப்பட்டு அமெரிக்கர் எடுத்துள்ள புதுவகையான முடிவு
180 ஆண்டுகள் வாழ ஆசைப்பட்டு அமெரிக்கர் எடுத்துள்ள புதுவகையான முடிவு
180 ஆண்டுகள் வாழ்வதற்காக அமெரிக்கர் ஒருவர் 87 லட்சம் ரூபாய் செலவு செய்து பலவித சிகிச்சைகளையும், விநோத பழக்கவழக்கங்களையும் பின்பற்றி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
180 ஆண்டுகள் வாழ்வதற்காக அமெரிக்கர் ஒருவர் 87 லட்சம் ரூபாய் செலவு செய்து பலவித சிகிச்சைகளையும், விநோத பழக்கவழக்கங்களையும் பின்பற்றி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் தேவ் ஆஸ்பிரே (Dave Asprey)-வின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் தன் வாழ்நாளை அதிகரிப்பதற்காக பல்வேறு புதிய சிகிச்சைகளையும், உணவுப் பழக்க வழக்கங்களையும் பின்பற்றி வருகிறார். இதன்மூலம் தன் உடலின் சக்தி பெருகி, 180 ஆண்டுகள் வரை தன்னால் உயிர்வாழ முடியும் என நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.
47 வயதான தேவ் ஆஸ்பிரே, தான் பின்பற்றும் முறைக்கு பயோஹேக்கிங் என பெயரிட்டுள்ளார். காலை உணவுகளை தவிர்க்க வேண்டும் எனக் கூறும் அவர், மதிய உணவுகளை ஒரு மணி நேரத்துக்கும் முன்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஆழ்ந்த உறக்கம்,கிரையோ சிகிச்சை மற்றும் தொடர்ந்து உணவில் கட்டுப்பாடுகளுடனான உண்ணாவிரத சுழற்சிகள் போன்றவை கடைபிடித்து வந்தால், ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும் என்றும் ஆஸ்பிரே கூறியுள்ளார். தன்னுடைய உடலின் செயல்பாடுகளை அதிகரிப்பதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவு செய்துள்ளார். எலும்புகளில் இருக்கும் மஜ்ஜைகளை நீக்கிவிட்டு அந்த பகுதிகளில் ஸ்டெம் செல்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் ஆஸ்பிரே தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், தன்னுடைய வித்தியாசமான வாழ்க்கை முறைகள் குறித்து ஹோலி வில்லோபி (Holly Willoughby) என்பவருடன் பகிர்ந்து கொண்டார். உலகில் நீண்ட நாள் ஏன் வாழ விரும்புகிறீர்கள் என வில்லோபி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஆஸ்பிரே, தான் ஒரு ஆர்வமுள்ள மனிதர் எனக் கூறினார். இந்த உலகில் நிறைய விஷயங்கள் இருப்பதாகவும், அவற்றை மாற்ற வேண்டும் என விரும்புவதாகவும் கூறினார். அவற்றை செய்வதற்கு நீண்ட நாள் இருக்க வேண்டும் என்பதால், இத்தகைய சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு வருவதாக ஆஸ்பிரே தெரிவித்தார். நீண்ட நாள் உயிர் வாழ்வதற்கு தான் எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகள் விலை உயர்ந்தவையாக இருந்தாலும், உண்ணாவிரதம் இருப்பதுபோன்ற விலையில்லாத வழிமுறைகளையும் பின்பற்றி வருவதாக தேவ் ஆஸ்பிரே தெரிவித்துள்ளார்.
40 வயதில் இருக்கும் நபர்கள் தன்னுடைய முறையை பின்பற்றினால் 100 வயதுக்கு மேல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என ஆஸ்பிரே கூறியுள்ளார். தான் மட்டுமல்லாது, தன்னுடைய மனைவியும் இந்த முயற்சியில் ஈடுபடுவதாக அவர் கூறியுள்ளார். வயதாவதை தடுப்பதற்காக உணவு மற்றும் உறக்கத்தில் கட்டுபாடுகளை பின்பற்றுவதுடன், சில கூடுதலான சிகிச்சைகளையும் எடுத்து வருகிறார். ஸ்டெம் செல்களை உடலில் மீண்டும் செலுத்துவது குறித்து விளக்கிய ஆஸ்பிரே, வயதுக்கு ஏற்ப உடலில் ஸ்டெம் செல்கள் அழிவதாகவும், அதனை மீண்டும் உடலில் செலுத்துவதன் மூலம் வயது அதிகமாவது தடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கோல்டு தெரபி (cold therapy) மூலம் குறைந்த வெப்ப நிலையில் திசுகளுக்கு பிரத்யேக சிகிச்சையும் எடுத்துக்கொள்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குளிர்ந்த நீரை மட்டுமே குளிப்பதற்காக பயன்படுத்துகிறார். ஃபாஸ்டிங் செய்தால், செரிமான கோளாறுகள் சரி செய்யப்பட்டு, பலவித நோய்களில் இருந்து விடுபடலாம் என ஆஸ்பிரே கூறுகிறார். ஆனால், அவர் கூறிய பல கருத்துகளுக்கு வில்லோபி உள்ளிட்ட பலரும் மாற்று கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
Published by:Ram Sankar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.