• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பாஸ்போர்ட் தொலைந்ததால் 18 ஆண்டுகள் பாகிஸ்தானில் சிறைவாசம்.. கண்ணீர்மல்க நாடு திரும்பிய இந்திய மூதாட்டி..

பாஸ்போர்ட் தொலைந்ததால் 18 ஆண்டுகள் பாகிஸ்தானில் சிறைவாசம்.. கண்ணீர்மல்க நாடு திரும்பிய இந்திய மூதாட்டி..

18 ஆண்டுகள் பாகிஸ்தானில் சிறைவாசம் அனுபவித்த இந்திய மூதாட்டி

18 ஆண்டுகள் பாகிஸ்தானில் சிறைவாசம் அனுபவித்த இந்திய மூதாட்டி

அவுரங்காபாத் திரும்பிய அவரை காவல்துறையினரும், உறவினர்களும் கண்ணீர்மல்க வரவேற்றனர். அப்போது பேசிய 65 வயதான ஹசினா பேகம், சொர்க்கத்துக்கு திரும்பியிருப்பதாக தெரிவித்தார்.

  • Share this:
பாஸ்போர்ட் தொலைந்ததால் பாகிஸ்தானில் சிறைவாசம் அனுபவித்த மூதாட்டி ஒருவர் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்பியிருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த ஹசினா பேகம் என்பவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருக்கும் தனது கணவரின் உறவினர்களை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவர் 18 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்தியா திரும்பப்போகிறோம் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்.

ஹசினா பேகம், உத்தரப்பிரதேச மாநிலம், அவுரங்காபாத்தில் வசித்து வந்தார். தனது கணவர் தில்ஷாத் அகமதுவின் உறவினர்கள் பாகிஸ்தானில் வசிப்பதால், அவர்களை நேரில் சென்று நலம் விசாரித்து வருவதற்காக 18 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் சென்றுள்ளார். லாகூரில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக தனது பாஸ்போர்ட்டை ஹசினா பேகம் தொலைத்துள்ளார். இதனைக் கண்டுபிடித்த பாகிஸ்தான் அதிகாரிகள், அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர்.

18 ஆண்டுகள் பாகிஸ்தானில் சிறைவாசம் அனுபவித்த இந்திய மூதாட்டி


இதனால், பாகிஸ்தானில் அவர் சிறைவாசத்தை அனுபவிக்க நேர்ந்தது. அவரை மீட்க இந்தியாவில் இருக்கும் உறவினர்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்துவந்தனர். அண்மையில், அவுரங்காபாத் காவல்துறையினர் ஹசினா பேகம் தொடர்பான தகவல்களை திரட்டி மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் கைதிகள் மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் இந்திய கைதிகளின் பரஸ்பர தகவல்கள் பரிமாற்றத்தின் அடிப்படையில் ஹசினா பேகத்தின் தகவல்களும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய கைதிகளை அண்மையில் பாகிஸ்தான் அரசு விடுவித்தது. இதனடிப்படையில், ஹசினா பேகமும் விடுதலை செய்யப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்பினார்.

அவுரங்காபாத் திரும்பிய அவரை காவல்துறையினரும், உறவினர்களும் கண்ணீர்மல்க வரவேற்றனர். அப்போது பேசிய 65 வயதான ஹசினா பேகம், சொர்க்கத்துக்கு திரும்பியிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், " நான் எனது கணவரின் உறவினர்களை பார்ப்பதற்காக 18 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் சென்றேன். எதிர்பாராதவிதமாக என்னுடைய பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது. இதனை கண்டுபிடித்த அதிகாரிகள் என்னை வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்தனர்.

நான் எவ்வளவோ மன்றாடியும் அவர்கள் கேட்கவில்லை. நான் ஒரு அப்பாவி, என்னை விட்டுவிடுங்கள் என கேட்டேன், அதனை அவர்கள் காதில்கூட வாங்கிக்கொள்ளவில்லை. அவுரங்காபாத் காவல்துறையினரின் அறிக்கை கிடைத்த பின்னரே, என்னை விடுவிப்பதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர். நான் இப்போது சொர்க்கத்துக்கு திரும்பியதுபோல் உணர்கிறேன். கடந்த 18 ஆண்டுகளாக நான் பல்வேறு தடைகளையும், சோதனைகளையும் கடந்து வந்திருக்கிறேன்.

என்னை விடுதலை செய்வதற்காக முயற்சி எடுத்த என்னுடைய உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்", என்றார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஜனவரி 1ம் தேதி இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் கைதிகள் 263 பேர் மற்றும் மீனவர்கள் 77 பேரின் தகவல்களை பகிர்ந்துகொண்டது. அதேபோல், பாகிஸ்தான் அரசும் 49 இந்திய கைதிகள் மற்றும் 270 மீனவர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்டது. இதனடிப்படையில், ஹசினா பேகத்தின் தகவல்கள் உறுதி செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: