ஈராக்கின் தென்கிழக்கு பகுதியில் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு இடிக் கடவுளுக்குக் கட்டிய பழமையான கோவிலைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ’நீங்கிர்சு’ என்று அழைக்கப்படும் மெசபடோமியன் கடவுளுக்குக் கட்டப்பட்ட கோவில் இது. இந்த கடவுளை வசந்த கால இடிக் கடவுள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கோவில் தொலைந்துபோன இடமாகக் கருதப்பட்ட நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெசபடோமியன் கலாச்சாரத்தில் கிர்சு பகுதி மிக முக்கிய பகுதியாக இருக்கிறது. இந்த பகுதியின் சுமேரியன் கோவிலை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த கோவில் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கோவிலில் இடிகளின் கடவுள் என்று கருதப்பட்ட ’நீங்கிர்சு’ சிலையை முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர்.
பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த கோவிலில் ஆய்வு நடத்திவருகின்றனர். தொடர்ந்து 4,500 வருடங்கள் பழைமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கிர்சு பகுதியைப் பொருத்தவரை மெசபடோமியன் பகுதியின் முக்கிய நகரமாக இருக்கிறது. யூப்ரடீஸ் மற்றும் டைக்ரிஸ் நதிக் கரைகள் ஈராக், மேற்கு சிரியா, தென்கிழக்கு துருக்கி ஆகிய பகுதிகளை இணைக்கிறது. உலகின் பழைமையான நாகரீகமாகக் கருதப்படும் சுமேரியர்களின் முதல் குடியிருப்பு பகுதியாக இப்பகுதி கருதப்படுகிறது.
1877 ஆம் ஆண்டு பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் டி சர்செக் (Ernest de Sarzec) என்ற நபரால் இந்த இடம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சுமேரிய மன்னர் குடியா-வின் 4,000 ஆண்டுகள் பழைமையான சிலை இங்கு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இங்கு ஆய்வு செய்ய ஒன்றும் இல்லை என்று கருதப்பட்ட நிலையில் தற்போது இடிக் கடவுளின் சிலை கண்டுபிடிப்பு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கிர்சு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய கண்டுபிடிப்பாக இடிக் கடவுளின் சிலை கருதப்படுகிறது. இடிக் கடவுளுக்கு இடி, மழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றின் மேல் சக்தி இருந்ததாகக் கருதப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Archeological site, God, Iraq