விமானம் புறப்படும் நேரத்தில் இறக்கையின் மீது ஏறி அமர்ந்த நபர்- அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்! (வீடியோ)

விமானம் புறப்படும் நேரத்தில் இறக்கையின் மீது ஏறி அமர்ந்த நபர்

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் இறக்கை மீது ஏறி அமர்ந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

 • Share this:
  அமெரிக்காவின், லாஸ் வேகாஸ் விமான நிலையத்தில் இருந்து போர்ட்லேண்ட் செல்வதற்கு 1367 போயிங் ரக விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, திடீரென ஒரு நபர் விமானத்தின் பின்புற இறக்கை மீது ஏறி அமர்ந்து கொண்டார். இதனைப்பார்த்த பயணிகளும், விமானிகளும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். 

  இதனையறிந்த பாதுகாப்பு அதிகாரிகளும், அந்த நபர் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற அச்சத்தில் விமான நிலையம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், விமானத்தின் அருகில் சென்ற பாதுகாப்பு படையினர், விமானத்தின் இறக்கை மீது ஏறி அமர்ந்த நபரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர். 

  ஆனால் அவர் அதிகாரிகளின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காமல், தன்னுடைய காலணிகளை கழற்றிவீசி விட்டு விமான இறக்கையின் மீது ஏறுவதிலேயே குறியாக இருந்தார். சுமார் 45 நிமிட போராட்டத்துக்குப் பிறகு அந்த நபர் தானாக கீழே விழுந்தார். நொடிப்பொழுதில் அவரை மடக்கிப் பிடித்த அதிகாரிகள், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விமானத்தில் இருந்து கீழே விழுந்ததால் அவருக்கு சில காயங்கள் ஏற்பட்டிருந்தது.  சிகிச்சைக்கு பின்னர் கிளார்க் கவுண்டி சிறைச்சாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடைய பெயர் கார்ல்சன் என்றும், 41 வயதான நபர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், எதற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டார் என்பது குறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கார்ல்சனின் விளையாட்டால் விமான நிலையம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளும் அச்சத்தின் பிடியில் உறைந்தனர். இது குறித்து பேசிய விமான பயணி எரின் இவான்ஸ், தன் வாழ்நாளில் இதுபோன்றதொரு வித்தியாசமான நிகழ்வை எதிர்கொண்டதில்லை எனக் கூறினார். 

  முதலில், அந்த நபரை பார்த்தவுடன் தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்று அஞ்சியதாக தெரிவித்த எரின் இவான்ஸ், அந்த விமானத்தில் உதவியாளராக 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் விமான உதவியாளர் கூட இத்தகைய பரபரப்பான சூழலை எதிர்கொண்டதில்லை என தெரிவித்ததாகவும் கூறினார்.

  தொடர்ந்து பேசிய அவர், அந்த நபர் விமானத்தின் இறக்கை மீது ஏறியதை கவனித்த விமானிகள், பயணிகள் அனைவரும் பதட்டபடாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறினார். இதனையடுத்து விமானம் முழுவதும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே புறப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

  மாஸ்டர் பட டீசர் வெளியீடு!

  மேலும், சில பயணிகள், இதுபோன்ற விபரீதமான விளையாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே, எதிர்காலத்தில் வேறெவரும் இத்தகைய செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்றும் கூறினர். பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருந்துவதாக தெரிவித்த விமான நிலைய அதிகாரிகள், மீண்டும் ஒருமுறை இத்தகைய செயல்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: