எத்தியோப்பியாவின் வடக்கு பகுதியில் டைக்ரே என்ற பிராந்தியம் உள்ளது. இங்கு அரசு படைகளுக்கும், போராளி குழுவினருக்கும் இடையே தொடர்ச்சியான உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.
இதன் எதிரொலியாக அங்கு 46 லட்சம் மக்கள் பசியால் வாடி வருகின்றனர் என்று பிபிசி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மருத்துவர்கள் கூட உணவுக்காக பிச்சை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஐநா அமைப்பு மற்றும் உலக உணவு திட்ட (WFP) அமைப்பு ஆகியோர் இணைந்து அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் படி, எத்தியோப்பியாவின் டைக்ரே பகுதியில் 40 சதவீதம் மக்கள் மிகுந்த உணவு தட்டுப்பாட்டில் இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் 2 லட்சம் மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
டைக்ரே பிராந்தியத்தை சுற்றியிலும் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதால் தொண்டு அமைப்புகள் கூட அங்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. மிகுந்த போராட்டங்களுக்கு இடையே நடந்தே சென்று ஒரு சில அமைப்புகள் அங்கு உணவையும், மருந்துகளையும் வழங்கி வருகின்றன.
மேலும் படிக்க : மிகத் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் நியோகோவ் வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா? சீனாவின் எச்சரிக்கைக்கு ஐ.நா பதில்
ஒவ்வொரு குடும்பத்துக்கும் தங்கள் உணவுக்கான ஆதாரமாக விளங்கிய அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு வருகின்றன என்றும், மொத்த மக்கள் தொகையில் முக்கால்வாசி பேர் உயிர் வாழ்வதற்கே மிகுந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்றும் உலக உணவு திட்ட அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வேறு எந்த உணவுப் பொருட்களும் கிடைக்காத சூழலில் பல குடும்பங்கள் கையிருப்பில் உள்ள தானியங்களை மட்டுமே நம்பியுள்ளன. அதிலும்கூட நாளொன்றுக்கு எடுத்துக் கொள்ளப்படும் உணவின் அளவும், சாப்பிடும் நேர எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகின்றன.
முன்னதாக, டைக்ரே பகுதியில் உள்ள போராளி குழுவினருக்கு எதிராக அரசு படைகளை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் எத்தியோப்பியாவின் பிரதமரும், நோபல் பரிசு பெற்றவருமான அபே அகமது அனுப்பி வைத்ததன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே மோதல் மூண்டது.
மேலும் படிக்க : பூமியை நெருங்கி வரும் சிறிய கோள்.. நாசா எச்சரிக்கை!
எத்தியோப்பியாவில் பல்வேறு இனக் குழுக்களை ஒருங்கிணைத்த அரசாங்கம் கடந்த 1990களுக்கு மத்தியில் இருந்து ஆட்சி செய்து வந்தது. ஆனால் அரசியல் தலைவர்கள் ஊழல் செய்ததாக மக்கள் கிளர்ச்சி எழுந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டில் போராட்டங்களுக்கு இடையே அபே அகமது பிரதமராக பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்ற பிறகு அண்டை நாடான எரித்திரியாவுடன் இருந்த போர் பிரச்சினைக்கு தீர்வு கண்டதன் காரணமாக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
இருப்பினும், அபே அகமது சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையொட்டி, அரச படைகளுக்கும், போராளி குழுவினருக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் நீடித்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hungry