உலகம் முழுவதும் ஊழியர்களின் பணி நேரத்தில் மாற்றங்களை கொண்டு வந்து அவர்களின் செயல் திறனில் மாற்றங்களை கொண்டு வர முடியுமா என பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பிரிட்டனில் பல நிறுவனங்கள் ஒன்றிணைந்து வாரத்திற்கு நான்கு வேலை நாட்கள் என்ற திட்டத்தை சோதனை முயற்சியாக செயல்படுத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சியை பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் பாஸ்டன் கல்லூரி மற்றும் லண்டனின் ஆய்வு அமைப்புகள் இணைந்து நடத்தின. கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கி டிசம்பர் வரை பல்வேறு துறைகளை சார்ந்த 61 நிறுவனங்கள் சோதனை முயற்சியாக வாரத்திற்கு 4 நாள் வேலை திட்டத்தை நடத்தியுள்ளன.
இந்த சோதனை திட்டத்தில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். முடிவுகளின் படி இந்த 4 நாள் வேலை திட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தது எனவும், சோதனையில் பங்கேற்ற 61 நிறுவனங்களில் 56 நிறுவனங்கள் அதாவது 92 சதவீத நிறுவனங்கள் இந்த நான்கு நாள் வேலை திட்டத்தையே தொடர விரும்புகின்றன.
இதில் 18 நிறுவனங்கள் இந்த முறையை நிரந்தரமாக பின்பற்ற முடிவு செய்துள்ளன. ஊழியர்களிலும் கணிசமானோருக்கு இந்த நான்கு நாள் வேலை முறை பிடித்தமானதாக உள்ளது. கூடுதலாக எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் இந்த 4 நாள் வேலை முறையை மாற்றி 5 நாள் வேலைக்கு செல்ல விருப்பமில்லை என 15 சதவீத ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டுகளை ஒப்பிடும் போது இந்த சோதனை திட்ட காலத்தில் நிறுவனத்தின் வருவாய் 35 சதவீதம் உயர்ந்துள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஊழியர்கள் ராஜினாமா செய்யும் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இந்த வேலை முறையில் தங்களின் தூக்கம், மன அழுத்த பிரச்னைகள், தனிப்பட்ட வாழ்க்கை, மன நலன் ஆகியவை சிறப்பான உயர்வை கண்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாபெரும் சோதனை திட்டம் நிறுவனம் மற்றும் ஊழியர்கள் என இரு தரப்பிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் புதிய நடைமுறையை எதிர்காலத்தில் பல நிறுவனங்களும் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Britain, Office Work, UK, Work