இஸ்ரேலின் அதிகாலை வான்வழித் தாக்குதல்: காசாவில் 35 பேர், இஸ்ரேலில் 5 பேர் பலி- உலக நாடுகள் கவலை

காசா மீது இஸ்ரேல் தாக்கு.

புதனன்று அதிகாலை இஸ்ரேல் விமானப்படை காசா மீது நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 35 பேர் காசாவில் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

  • Share this:
    இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் நேற்று இரவு முதல் கடும் மோதல்கள் வெடித்தன. இதுவரை இல்லாத அளவுக்கு வான்வழித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய குழுக்கள் மற்றும் பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் மற்றும் பீர்ஷீபா மீது ராக்கெட் வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இஸ்ரேல் தாக்குதலில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் காஸாவில் இடிந்து விழுந்தது. இன்னொரு கட்டிடம் உருத்தெரியாமல் ஆனது. ஹமாஸ் உளவுத்துறையினர் மீது நடத்திய தாக்குதலில் பலி அதிகம் என்று கூறுகிறது இஸ்ரேல். மேலும் ஹமாஸ் ராக்கெட் வீச்சுத் தளம் மற்றும் ஹமாஸ் அலுவலகங்களைக் குறிவைத்துத் தாக்கியதாக இஸ்ரேல் கூறுகிறது.

    காஸாவில் 2014-ல் நடந்த சண்டைக்குப் பிறகு இப்போது பெரிய சண்டை மூண்டுள்ளது. இந்தச் சண்டை கொரோனா பரவலுக்கு மத்தியில் உலக நாடுகளுக்கு பெரும் கவலையாக மாறியுள்ளது.

    சண்டையில் அப்பாவி பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், உயிரிழக்கின்றனர்.



    இன்று அதிகாலை மக்கள் ராக்கெட் வீச்சு தாக்குதல் அதை தடுக்கும் இஸ்ரேல் தாக்குதல் ஆகியவற்றுடன் பீதியில் கண் விழித்தனர். வானிலிருந்து பெரிய சப்தங்கள் எழுந்து மக்களை பயமுறுத்துகிறது, வீடுகள் ஆடிக்கொண்டிருக்கின்றன.

    அராபியர்களும், யூதர்களும் இருக்கும் லோத் என்ற இடத்தில் ஹமாஸ் ராக்கெட் தாக்குதலில் வாகனம் ஒன்று சேதமடைய 2 பேர் பலியாகினர், அதில் ஒருவர் 7 வயது சிறுமி.

    ஹமாஸ் சுமார் 210 ராக்கெட்டுகளை வீசி பீர்ஷீபாவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவினால் பயங்கரவாத அமைப்பு என்று அழைக்கப்படும் ஹமாஸின் இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

    முஸ்லிம்களின் நோன்பு காலமான ரம்ஜானை ஒட்டி அல் அக்சா மசூதியருகே இஸ்ரேல் போலீஸுக்கும் பாலஸ்தீன எதிர்ப்பாளர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. இந்த மசூதி உள்ள இடத்தை இஸ்ரேல் யூதர்கள், டெம்பிள் மவுண்ட் என்று புனிதமாக்கியுள்ளனர், முஸ்லிம்களுக்கு இது புனிதசரணாலயம். இந்தச் சண்டைதான் இப்போது பெரிய போர் போன்று வெடித்துள்ளது. கோர்ட்டில் வழக்கும் உள்ளது, வழக்கு தீர்ப்பு வெளியானால் கிழக்கு ஜெர்சலேமிலிருந்து பாலஸ்தீன மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு, தீவிரவாதிகளுக்கு கடுமையான பாடம் புகட்டுவோம் என்று கூறியுள்ளதைப் பார்க்கும் போது இது இப்போதைக்கு முடியும் போல் தெரியவில்லை.

    அதே போல் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே என்பவர் கூறும்போது, ‘அல் அக்சா மசூதி அருகேவும் காஸாவிலும் மேற்குக் கரையிலும் இஸ்ரேல் தீ மூட்டியுள்ளது, இதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார். ஆகவே இது பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
    Published by:Muthukumar
    First published: