Home /News /international /

இனவாதத்திற்கு பலியான ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறுதிச்சடங்கு

இனவாதத்திற்கு பலியான ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறுதிச்சடங்கு

ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறுதிச்சடங்கு (Reuters)

ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறுதிச்சடங்கு (Reuters)

அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறுதிச்சடங்கு முடிந்துள்ளது.

 • News18
 • Last Updated :
  அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக்குப் பின் பியர்லேண்ட் பகுதியில் உள்ள கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

  "என்னால் மூச்சு விடமுடியவில்லை.." இது ஒரு கறுப்பின இளைஞனின் கடைசி குரல்.. இந்தக் குரல் இன்று உலகெங்கும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக மாறி, இனவாதத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வைத்துள்ளது.

  கடந்த மே மாதம் 25 ஆம் தேதி, அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் பகுதியில் உள்ள கடையொன்றில் 20 டாலர் கள்ள நோட்டை ஒருவர் கொடுத்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கள்ள நோட்டை கொடுத்ததாக சொல்லப்படும் ஜார்ஜ் ஃப்ளாய்டை அவரது காரில் இருந்து இறங்குமாறு வலியுறுத்தியுள்ளனர். அதற்கு ஜார்ஜ் மறுத்த நிலையில் அவரை காரில் இருந்து வெளியே இழுத்த காவலர்கள், தரையில் கிடத்தினர்.

  அப்போது டெரெக் சாவின் (Derek Chauvin) என்னும் போலீஸ் அதிகாரி ஜார்ஜின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தினார். காலால் குரல்வளையை நெரித்துக் கொண்டிருந்த அந்த அதிகாரியிடம் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று கதறினார் ஜார்ஜ். ஆனால் அவரது அலறலுக்கு செவி மடுக்காத காவல்துறை அதிகாரிகளால் ஜார்ஜின் உயிர் காற்றில் கரைந்து போனது.

  இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது அங்கிருந்த டெர்னெல்ல ப்ரேசியர் என்னும் 17 வயதுப் பெண், தான் எடுத்த வீடியோவை வெளியிட அமெரிக்க தேசம் அதிர்ந்து போனது. மரணத்தின் விளிம்பில் ஒலித்த ஜார்ஜின் குரல் நசுக்கப்பட்ட சம்பவத்தை ஒட்டுமொத்தமாக ஒடுக்கப்பட்டோருக்கு நிகழ்ந்த அநீதியாகக் கருதினர் அமெரிக்கர்கள்.

  ஜார்ஜின் மரணத்திற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. பிளாக் லைவ்ஸ் மேட்டர் (#BlackLivesMatter) என்னும் பெயரில் தொடங்கப்பட்ட போராட்டம் நாடெங்கும் பரவியது. சில இடங்களில் போராட்டத்தில் வன்முறை வெடிக்க அமெரிக்கா போர்க்களமானது.

  வாஷிங்டனில் கூடிய போராட்டக்காரர்கள் உலகின் அதிகார மையமான வெள்ளை மாளிகையையே அசைத்தனர். நிலைமை கட்டுக்குள் வராவிட்டால் ராணுவத்தை களமிறக்கவும் தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். வெள்ளை மாளிகையின் வெளியில் திரண்ட போராட்டக்காரர்களால் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதுங்கு குழிக்குள் ஒளிந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாயின.

  இனவாதத்தை எதிர்த்து அமெரிக்காவில் தொடங்கிய இந்த போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. லண்டன், பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திரண்ட மக்கள் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.

  ஆஸ்திரேலியாவில் பொதுமக்கள் கூடுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்த போதும், நீதிமன்ற உத்தரவை மீறி சிட்னியில் கடலெனத் திரண்ட போராட்டக்காரர்கள், ஆஸ்திரேலிய பழங்குடியினர் காவல்துறையினரால் கொல்லப்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்து நீதி கோரினர்.

  உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தல் இருந்த போதும் 13 நாட்களாக இந்தப் போராட்டம் முடிவின்றித் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஹூஸ்டனில் நடைபெற்ற ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 6300 பேர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஜார்ஜ் ஃப்ளாய்டின் உடல் பியர்லேண்ட் பகுதியில் உள்ள அவரது தாயாரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

  Also See: தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எவை... எவை...? - மாவட்டம் வாரியாக முழு பட்டியல்
  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Published by:Sankar
  First published:

  Tags: Racism, USA

  அடுத்த செய்தி