ஆப்கானிஸ்தானில் சலாங் சுரங்கப்பாதையில் எண்ணெய் டேங்கர் ஒன்று கவிழ்ந்து தீப்பித்த விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காபூலின் வடக்கே உள்ள பர்வான் மாகாணத்தில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தால் மலைப்பாதையின் இருபுறமும் பயணித்த பயணிகள் சிக்கித் தவித்தனர். இந்த சம்பவத்தில் சுமார் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 32 பேர் காயமடைந்தனர் என்றும் பர்வான் கவர்னரின் செய்தித் தொடர்பாளர் ஹெக்மத்துல்லா ஷமிம் தெரிவித்துள்ளார்.
பொதுப்பணி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹமிதுல்லா மிஸ்பா கூறுகையில், சலாங் சுரங்கப்பாதையில் எண்ணெய் டேங்கர் ஒன்று எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததில் தீப்பிடித்தது. அது மட்டுமின்றி, இந்த விபத்தால், பின்னால் வந்த பல வாகனங்களும் விபத்தில் சிக்கி தீக்கிரையாகின என்று தெரிவித்தார். பர்வானில் உள்ள மூத்த சுகாதார அதிகாரி அப்துல்லா ஆப்கான் மால் கூறுகையில், விபத்தில் சிக்கி பல பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இறந்தவர்களில் யார் ஆண், யார் பெண் என்பதையே அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹெலிகாப்டர்களில் மீட்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதால், சலாங் பாஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்த சலாங் பாதை சுமார் 3,650 மீட்டர், அதாவது 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான மலை நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். 1950-களில் சோவியத் கால நிபுணர்களால் கட்டப்பட்ட பாதை ஆகும். அதுமட்டுமின்றி, இந்த பாதை சுமார் 2.6 கிலோமீட்டர் சுரங்கப்பாதையை உள்ளடக்கியது. தலைநகர் காபூலை வடக்கே இணைக்கும் இந்து குஷ் மலைத்தொடர் வழியாக இந்தப் பாதை செல்கிறது.
சலாங் சுரங்கம் ஒரு பொறியியல் சாதனையாகப் போற்றப்பட்டாலும், குளிர்காலத்தில் நிறைய விபத்துக்கள், கடுமையான பனிப்பொழிவுகள் மற்றும் பனிச்சரிவுகள் காரணமாக அடிக்கடி மூடப்படுவது குறிப்பிடத்தக்கது. 2010-ல் ஏற்பட்ட கடும் பனிச்சரிவு காரணமாக சலாங் பாதையில் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, Fire