ஈரான் நாட்டில் ஹிஜாப் சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 15 வயது பள்ளி மாணவி ஒருவர் காவல்துறையினர் தாக்குதலில் மரணம் அடைந்துள்ளார்.
இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. அங்கு 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அங்கு பெண்கள் இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றுவது, ஹிஜாப் அணிவது உள்ளிட்டவற்றை கண்காணிக்க நெறிமுறை பிரிவு என்று காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி ஹிஜாப் அணியாமல் காரில் பயணம் செய்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் காவல்துறை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து ஈரானில் இந்த சட்டத்திற்கு எதிராக பெண்கள், கல்லூரி மாணவர்கள், மனித உரிமையாளர்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்தை அரசு காவல்துறையை வைத்து கடுமையாக அடக்கி ஒடுக்கி வருகிறது.
இந்த போராட்டத்தின் முக்கிய சக்தியாக மாணவர்கள் உள்ள நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காவல்துறை அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் அந்நாட்டின் அர்தாபில் என்ற பகுதியில் உள்ள பள்ளி ஒன்றுக்கு சென்ற அதிரடி காவல்துறையினர் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயோதுல்லா அலி காமேனியை புகழ்ந்து கோஷம் எழுப்பி வாழ்த்து பாட உத்தரவிட்டுள்ளனர். இந்த வாழ்த்து பாடலை சில மாணவிகள் பாடாத நிலையில், அவர்களை அடித்து தாக்கி காவல்துறை கைது செய்துள்ளனர்.
Schoolgirl #AsraPanahi died on Wednesday after being beaten by security forces in Iran.
A High School in Ardabil, city, forced students to join a pro regime rally. Students refused and instead they chanted: “Women Life Freedom”.
That’s why they got beaten up. #MahsaAmini pic.twitter.com/zz5o257c0G
— Masih Alinejad 🏳️ (@AlinejadMasih) October 17, 2022
இந்த தாக்குதல் சம்பவத்தில் அஸ்ரா பனாஹி என்ற 15 வயது மாணவி பரிதபமாக உயிரிழந்துள்ளார். இந்த கொடூர நிகழ்வுக்கு ஈரான் ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், அரசு தரப்போ மாணவியின் உயிரிழப்புக்கு தாங்கள் காரணம் இல்லை. அவருக்கு இருதய கோளாறு இருந்ததால் உயிரிழந்துள்ளார் என குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இதையும் படிங்க: தீவிரமாக பரவும் எபோலா வைரஸ் தொற்று.. இரு நகரங்களில் லாக்டவுன்!
ஹிஜாப் போராட்டத்திற்கு எதிராக காவல்துறை நடவடிக்கை காரணமாக இதுவரை 233 போராட்டக்காரர்கள் உயிரிழந்ததாகவும் அதில் 33 பேர் 18 வயதுக்கும் குறைவான சிறார்கள் எனவும் அதிர்ச்சிக்குரிய தகவலை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.