மாட்டுச் சாணம், கோமியம் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது - இந்திய மருத்துவச் சங்கம் விளக்கம்

மாட்டுச் சாணத்தை உடலில் பூசிக்கொண்ட நபர்

கொரோனாவுக்கு எதிராக மாட்டுச் சாணம், மாட்டு சிறுநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது என்று இந்திய மருத்துவச் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவருகிறது. நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். நாள் ஒன்றுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 4,000-த்தை நெருங்கியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

  இதற்கிடையில், கொரோனா பரவல் குறித்தும், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்தும் பல்வேறு வதந்திகள் மக்களிடையை பரவுகின்றன. வதந்திகளைத் தடுத்து நிறுத்துவது பெரும்பணியாக இருந்துவருகிறது. இந்தநிலையில், குஜராத் மாநிலத்தில் பசுவின் மாட்டுச் சாணம் கொரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று மக்கள் நம்பி, மாட்டுச் சாணத்தை உடல் முழுவதும் பூசிக் கொள்கின்றனர். அதனை ஒரு இயக்கமாக செய்யும் அளவுக்கு அவர்களது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

  முன்னதாக, மத்தியப் பிரதேச கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தாகுர், ‘மாட்டுச் சாணத்தைக் கொண்டு வீட்டைச் சுத்தம் செய்வது பாதுகாப்பானது. இது கற்பனையில் சொல்வது அல்ல. இது அறிவியல்’ என்று தெரிவித்துள்ளார். அதேபோல, உத்தரப் பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்தர் சிங், ‘கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மக்கள் மாட்டின் சிறுநீரகத்தைக் குடிக்கவேண்டும்’ என்று குறி அதைக் குடித்துக் காட்டியுள்ளார்.

  இந்தநிலையில், இந்திய மருத்துவ சங்கத் தலைவர் ஜெயலால், ‘மாட்டுச்சாணம் மற்றும் மாட்டு சிறுநீர் கொரோனா பாதிப்புக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. மேலும், மாட்டுச் சாணம், மாட்டு சிறுநீரைப் பயன்படுத்துவதால் விலங்குகளிடமிருந்து வேறு ஏதேனும் நோய்கள் மனிதனுக்கு பரவலாம்’ என்று எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: