கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக ஏப்ரல் 11 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன் வழங்கல் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன்களை இம்மாதம் 11 ஆம் தேதி இரவு முதல் ரத்து செய்ய இருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இலவச தரிசன டோக்கன்களை வாங்குவதற்காக அதிக அளவில் பக்தர்கள் திருப்பதிக்கு தினமும் வருகின்றனர். இது தவிர திருப்பதியிலும் கொரோனா பெரும் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. எனவே கொரோனா பரவலை தடுத்து நிறுத்தும் வகையில், பக்தர்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் நடைமுறை இம்மாதம் 11 ஆம் தேதி இரவு முதல் நிறுத்தி வைக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இலவச தரிசன டோக்கன்கள் மீண்டும் வழங்குவது பற்றிய அறிவிப்பு, நிலைமை சீரான பின் வெளியிடப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Must Read : புதிய அறிகுறிகளுடன் அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் 2-வது அலை - முதல் அலையில் இருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறது
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் கொரோனா தொற்று பரவலை தடுத்து நிறுத்தும் வகையில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.