டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி கொச்சைப்படுத்தி பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கடந்த நவம்பர் இறுதியிலிருந்து போராடி வருகின்றனர். பேச்சுவார்த்தைகளில் இன்னமும் சுமுகத் தீர்வு எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் போராடும் விவசாயிகளில் வயதானவர்களுக்கு கடும் முதுகுவலி, முழங்கால் வலி, உள்ளங்கால்களில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர், இவர்களுக்காக சிங்கு எல்லையில் மசாஜ் மையம் ஒன்றை உதவும் உள்ளம் கொண்ட ஒருவர் துவக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேசும்போது, 'குடியரசு தலைவரின் உரை, உழைக்கும் மக்களுக்கு எதிராக அமைந்திருக்கிறது என்பதை வேதனையுடன் பதிவு செய்து கொள்கிறேன்.
விவசாயிகளின் போராட்டம் 2.5 மாதமாக தொடர்ந்து டெல்லி எல்லை ஓரங்களில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. உலகமே இதை பார்த்து வியந்து கொண்டு இருக்கிறது. அமைதியான முறையில் அறவழியில் கட்டுப்பாடான வகையில் லட்சக்கணக்கான மக்கள் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக போராடி கொண்டு இருக்கிறார்கள்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கும் நிலையில் கூட, அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை உடனே இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுகிறேன். போராடி கொண்டு இருக்கும் மக்களை பிரதமர் மோடி கொச்சைப்படுத்தும் வகையில், போராட்டம் நடத்தும் கூலிகள் என்று விவசாயிகளை மோடி விமர்சித்து இருக்கிறார்.
இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். மக்களுடைய உணர்வுகளை மதித்து இந்த அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை உடனே இயற்ற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன், என்று பேசினார்.
திமுக-வை சேர்ந்த டி.ஆர்.பாலு, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் பாஜகவை ஒன்றுமில்லாமல் ஆக்கலாம் என்று பேசியதும், விவசாயச் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.