மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் 50 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். ஏற்கனவே நடைபெற்ற எட்டு கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்தவிதமான சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் இன்று ஒன்பதாம் கட்டமாக விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. நண்பகல் 12 மணிக்கு தொடங்கும் இந்தப் பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்துள்ள வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், திறந்த மனதுடன் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு அரசு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் விவசாயிகளுடனான ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். விவசாயிகள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிவதற்காக 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அண்மையில் அமைத்ததற்குப் பிறகு, முதல்முறையாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
3 வேளாண் சட்டங்களுக்கும் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த நிலையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த குழுவில் பூபிந்தர்சிங் மன், பிரேம்குமார் ஜோஷி, அசோக் குலாரி, அனில் கான்வாட் ஆகியோர் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குழுவில் இருந்து விலகுவதாக பூபிந்தர் சிங் மான் அறிவித்துள்ளார். மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்ததால், தன் மீது விமர்சனங்களை எழுப்புவதால், குழுவிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.