முகப்பு /செய்தி /இந்தியா - சீனா / திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி பாஜகவில் இணைந்தார்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி பாஜகவில் இணைந்தார்!

தினேஷ் திரிவேதி

தினேஷ் திரிவேதி

முன்னாள் ரயில்வே அமைச்சரான தினேஷ் திரிவேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கியவர். இவர் மாநிலங்களவை எம்.பி பதவியை கடந்த மாதம் 12ம் தேதி ராஜினாமா செய்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

முன்னாள் ரயில்வே அமைச்சரும், கடந்த மாதம் ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்தவருமான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தினேஷ் திரிவேதி பாஜகவில் இணைந்தார்.

ஒரு சில வாரங்களில் மேற்குவங்க தேர்தல் தொடங்க உள்ள நிலையில் அங்கு உச்சக்கட்ட அரசியல் நகர்வுகள் அரங்கேறி வருகின்றன. ஒவ்வொரு கட்சியிலும் புதிதாக நட்சத்திரங்கள் இணைந்து வருவதுடன் கட்சி மாறுவோரின் எண்ணிக்கையும் நாள் தோறும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவர் தினேஷ் திரிவேதி இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் தினேஷ் திரிவேதி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜகவில் இணைந்தது தொடர்பாக தினேஷ் திரிவேதி கூறுகையில் “தேர்தலில் நான் போட்டியிடுகிறேனோ இல்லையோ ஆனால் தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றுவேன். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மேற்குவங்கம் நிராகரித்துவிட்டது. மேற்குவங்க மக்களுக்கு வன்முறையோ, ஊழலோ தேவையில்லை, வளர்ச்சி தான் தேவை. உண்மையான மாற்றத்திற்கு மேற்குவங்க மக்கள் தயாராகிவிட்டனர். மமதா பானர்ஜி தனது லட்சியங்களை மறந்து விட்டார்” என தெரிவித்தார்.

முன்னாள் ரயில்வே அமைச்சரான தினேஷ் திரிவேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கியவர். இவர் மாநிலங்களவை எம்.பி பதவியை கடந்த மாதம் 12ம் தேதி ராஜினாமா செய்தார்.

மேற்குவங்க மாநில தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள், எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் என தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் முதல்வர் மமதா பானர்ஜிக்கு அக்கட்சியினரின் தொடர் விலகல் மிகுந்த நெருக்கடியை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

இடதுசாரி கட்சியினர், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் என சுழன்று கொண்டிருந்த மேற்குவங்க அரசியலில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஏறக்குறைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஒப்பான வெற்றியை அத்தேர்தலில் பாஜக பதிவு செய்த நிலையில் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றியை பதிவு செய்து மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே சிக்கலில் தவிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் அதன் மூத்த தலைவரும், 2012-ல் ரயில்வே அமைச்சருமாக இருந்த தினேஷ் திரிவேதியின் விலகல் மேலும் நெருக்கடியை தந்துள்ளது.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் உரையாற்றிய  தினேஷ் திரிவேதி, மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி நடைபெற்று வரும் வன்முறை நிகழ்வுகள் காரணமாக தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

“ரவீந்திரநாத் தாகூர் பிறந்த மண்ணில் இருந்து வருகிறேன், ஆனால் அங்கு நடக்கும் வன்முறைகள் கவலையளிப்பதாக உள்ளது. தவறான ஆட்சிக்கு எதிராக நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று என் சிந்தனை எனக்கு வலியுறுத்துகிறது. இதன் மூலம் எனது ஜென்மபூமியில் உள்ள மக்களுக்காக நான் சுதந்திரமாக சேவை புரிய முடியும்.” இவ்வாறு தனது உரையில் தினேஷ் திரிவேதி பேசினார்.

நீண்ட காலமாகவே தினேஷ் திரிவேதியால் திரிணாமுல் காங்கிரஸில் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது. 2020 ஏப்ரல் மாதத்தில் தான் தினேஷ் ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ல் மத்திய ரயில்வே துறை அமைச்சராக தினேஷ் திரிவேதி இருந்த போது தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் டிக்கெட் விலையை உயர்த்தியதற்காக மமதா பானர்ஜி அவரை ராஜினாமா செய்யுமாறு நெருக்கடி அளித்ததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். ஒரு முறை சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்.

First published:

Tags: BJP, Mamata banerjee, TMC, West Bengal Assembly Election 2021