ராம்நாத் கோவிந்த், மோடி, சோனியா காந்தி உள்ளிட்ட இந்தியர்களை உளவு பார்க்கும் சீனா - அதிர்ச்சித் தகவல்

ராம்நாத் கோவிந்த், மோடி, சோனியா காந்தி உள்ளிட்ட இந்தியர்களை உளவு பார்க்கும் சீனா - அதிர்ச்சித் தகவல்

இந்தியா - சீனா

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதிகள் உள்ளிட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமானோரை சீனா உளவு பார்த்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே மோதல் போக்கு நீடிப்பதால், தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. சீனாவின் அத்துமீறலை கண்டிக்கும் வகையில், 200க்கும் மேற்பட்ட செல்போன் செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இந்த செயலிகள் பயனாளர்களின் தகவல்களை திருடுவதாகவும், இது இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இந்நிலையில் இந்தியாவின் முக்கிய பதவிகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சீனா உளவு பார்த்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக முக்கியமானவர்களின் தகவல்களை திரட்டுவதை புதிய போர் உத்தியாக சீனா கடைபிடிக்கிறதா என்ற கேள்வியை இத்தகவல் எழுப்பியுள்ளது.

    சீன அரசுடன் தொடர்புடைய ஷென்ஹூவா என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட பலரையும் உளவு பார்த்ததை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு அம்பலப்படுத்தியுள்ளது.

    முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ மூத்த அதிகாரிகள் 60 பேர் இந்நிறுவனத்தால் உளவு பார்க்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் முப்படைகளின் தளபதிகளாக பணியாற்றிய 14 பேரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

    அணுசக்தி கழகம் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளையும் ஷென்ஹூவா நிறுவனம் உளவு பார்த்து தகவல்களை திரட்டியுள்ளது. முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், மத்திய பொருளாதார குற்றப்பிரிவு, ரா உளவு அமைப்பு மற்றும் ஐபி எனப்படும் உளவுத்துறை உள்ளிட்டவற்றின் முன்னாள் அதிகாரிகளையும் இந்நிறுவனம் உளவு பார்த்துள்ளது.



    2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஷென்ஹூவா இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது. சீனாவில் 50 ஊழியர்களையும், வெளிநாடுகளில் 20 மையங்களையும் கொண்டு இந்நிறுவனம் இயங்குகிறது. நாளொன்றுக்கு 15 கோடி தகவல்களை இந்நிறுவனம் கையாள்கிறது. 500 கோடி செய்திகள் மற்றும் சமூக வலைதள தகவல்கள் மூலம் 30 லட்சம் விவரங்களை சேகரிக்கிறது.

    மேலும் படிக்க...திபெத்தில் சீனா ரூ.10 லட்சம் கோடி முதலீடு - ரயில் சேவை உட்பட உட்கட்டமைப்புகளை மேம்படுத்த முடிவு..

    WANG XUEFENG என்பவர் இந்நிறுவனத்தின் 86 விழுக்காடு பங்குகளை கொண்டு, நிறுவனத்தின் உரிமையாளராக செயல்படுகிறார். இவர் சமூக வலைதளங்களில் இருந்து தகவல்களை திரட்டுவது தொடர்பாக பத்தாண்டுகள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டவர் எனக் கூறப்படுகிறது.
    Published by:Vaijayanthi S
    First published: