இந்திய - சீன எல்லையில் இருநாடுகள் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இருநாடுகளும் எல்லையில் வீரர்களையும், படைகளையும் குவித்து வந்த நிலையில், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் பதற்றம் தணிக்கப்பட்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் என்ற அமெரிக்காவின் கருத்தை, இருநாடுகளும் ஏற்க மறுத்து விட்டன.
இந்நிலையில் QUAD GROUP எனப்படும் இந்தோ - பசிபிக் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கிழக்கு லடாக், தென்சீன கடல்பகுதி, இந்தோ பசிபிக் கடல் பகுதிகளில் சீன ராணுவத்தின் அத்துமீறல் அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இந்நிலையில் சந்திப்பை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, இந்திய எல்லையில் 60,000 வீரர்களை சீனா நிறுத்தியுள்ளதாக கூறினார்.
Also read... கொரோனா வைரஸை அமெரிக்கா தோற்கடிக்கும் - அதிபர் டிரம்ப் நம்பிக்கை
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுக்கு ஒரே அச்சுறுத்தல் சக்தியாக சீன கம்யூனிஸ்ட் கட்சி உள்ளதாகவும் அவர் கூறினார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்ததாகவும், இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் தேவையை உணர்த்துவதாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, லடாக் எல்லையில் உள்ள படைகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆயுதங்களை விநியோகிக்கும் பணிகள் விமானப்படையின் சி - 17 ரக விமானங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல், இந்திய விமானப்படையின் சினூக் ரக ஹெலிகாப்டர்கள் மூலம் லடாக் பகுதியில் ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், எல்லையில் பதற்றத்தைத் தணிப்பதற்கான இந்திய சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 7-வது கட்டப் பேச்சுவார்த்தை வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. அப்போது எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெற வேண்டும் என இந்தியா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ladakh