இந்திய சந்தையை தொடர்ந்து கோலோச்சும் சீனா - ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி விற்பனையில் உச்சம்
மாதிரிப்படம்
சீன நிறுவனங்கள் கடந்த 2019ம் ஆண்டில் இந்திய சந்தையில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததை அடுத்து, சீனப் பொருட்களை புறக்கணிக்குமாறு, நாடு முழுவதும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவளித்து பல்வேறு பிரபலங்கள், சீன பொருட்களை இனி வாங்க மாட்டோம் என்று உறுதியளித்திருப்பதோடு, இதுவரை தாங்கள் பயன்படுத்தி வந்த சீனப் பொருட்களையும் புறந்தள்ளியுள்ளனர்.
இந்நிலையில், சீன நிறுவனங்கள் உற்பத்தி செய்த ஸ்மார்ட் போன், டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்திய சந்தையில் விற்பனையாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தென்கொரியாவின் சாம்சங் நிறுவனமே கோலோச்சி வந்தது. அதேபோல், டிவி விற்பனையிலும் தென்கொரியாவின் எல்ஜி, ஜப்பானின் சோனி ஆகிய நிறுவனங்களே கால்பதித்து நின்றன.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்கிய இந்தியாவின் மைக்ரோமேக்ஸ், லாவா ஆகிய நிறுவனங்கள் குறைந்த விலை செல்போன்களை அறிமுகம் செய்து அதிரடி காட்டின. அதைத் தொடர்ந்து இந்திய சந்தையில் களமிறங்கிய சீனாவின் ஜியோமி, விவோ, ஓப்போ, ஒன்பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து, வாடிக்கையாளர்களை கவரத் தொடங்கின.
இதையடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 60 சதவீதத்தை கைப்பற்றிய சீன நிறுவனங்கள், கடந்த ஆண்டு அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் சுமார் 71 சதவீதம் சீன நிறுவனங்களின் தயாரிப்புகளே. அதேபோல், நடப்பாண்டின் முதல் காலாண்டிலும் இந்திய சந்தையில் 81 சதவீத சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன.
Also see:
அதேபோல், ஸ்மார்ட் டிவிக்கள் விற்பனையிலும் சீன நிறுவனங்களின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் 29 சதவீத அளவுக்கே சீன நிறுவனங்களின் தயாரிப்பு விற்பனையாகிய நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில், இது 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டின் காலாண்டியிலும் சீன நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவிக்கள் 38 சதவீதம் விற்பனையாகியுள்ளன.
இதனிடையே, சீனாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி அளவு 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவடைந்திருப்பதாக மற்றொரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. குறிப்பாக, கடந்த 2018 -19ஆம் ஆண்டில் இந்தியா - சீனா இடையே 6 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தியா சீனாவுக்கு ஒரு லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.
ஆனால், சீனாவிடம் இருந்து 4 லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்துள்ளது. இது சீனாவுக்கு ஏற்றுமதி செய்ததை விட, 3 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாகும். எனவே, சீனப் பொருட்களை ஒதுக்குவதற்கு முன்பு, இந்திய தயாரிப்பு நிறுவனங்களை வலுப்படுத்த முன்வர வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.