கடந்த ஆண்டு இந்திய-சீன எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 4 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்திய-சீன எல்லையில் கடந்த ஆண்டு சீன ராணுவம் தனது படைகளை குவித்து வருவதாகவும், எல்லையில் ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் இந்தியா குற்றம் சாட்டியது. எனினும் இந்த தகவலை சீனா மறுத்து வந்தது.
இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவமும் தனது படைகளை எல்லைப் பகுதிக்கு அனுப்பியது. இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவம் அத்துமீறிய போது, இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில், 43-க்கும் அதிகமான சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்
இந்த தகவலை சீனா மறுத்தது. இப்போது வரை, இந்திய பதிலடியில் கொல்லப்பட்ட சீன வீரர்களின் எண்ணிக்கையை சீனா தெரிவிக்கவில்லை. எனினும், சீன ராணுவத்தினர் 45 பேரும் பலியானதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் சமீபத்தில் தகவல் வெளியிட்டிருந்தது.
Must Read : கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 45 சீன வீரர்கள் பலியானது உண்மைதான்: ரஷ்ய செய்தி நிறுவனம் திட்டவட்டம்
இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 4 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான ‘பீப்புள்ஸ் டெய்லி’யில் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதில், உயிரிழந்த 4 சீன வீரர்களுக்கும் சீனா விருது அறிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.