லடாக் எல்லைப் பிரச்சினையைத் தொடர்ந்து, "இந்தியப் பொருட்களே நமது பெருமை" என்ற புதிய பிரச்சாரத்தை அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தொடங்கியுள்ளது.
இந்தியாவிலேயே தயாரிக்க வாய்ப்பு உள்ள பொம்மைகள், அழகுசாதனப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள் என 3,000 பொருட்கள் பட்டியலிட்டு, அடுத்த ஆண்டு இறுதிக்குள் இவற்றை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதன்மூலம், சீனாவிலிருந்து சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதியை தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல, சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பது, சீன முதலீடுகளை திரும்பப் பெறச் செய்வது போன்ற திட்டங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால், இவையெல்லாம் சாத்தியமில்லாதது என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
2018-19-ம் ஆண்டில் சீனாவிலிருந்து 5 லட்சத்து 33,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய இலக்கு என்பது ஐந்தில் ஒரு பங்கு தான் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தியாவிலும், சீனாவிலும் இரு நாட்டு தொழிலதிபர்களும் பரஸ்பரம் முதலீடு செய்துள்ளனர். சீன அரசு நிறுவனங்களே மிகப்பெரும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன.
எனவே, இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களையோ, பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களையோ உடனடியாக வெளியேறுமாறு கூற முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலக வர்த்தக அமைப்பு மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களிடம் அளித்துள்ள வாக்குறுதிகள் காரணமாக, சீன முதலீடுகளை திரும்பப் பெறுமாறு உடனடியாக கூற முடியாது என்பதே உண்மை.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்களுக்கான இடுபொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. உதரணமாக எல்இடி பல்புகளை இந்தியாவிலேயே தயாரித்தாலும், அதில் உள்ள 30 முதல் 40 சதவீத பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவையாக உள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவில் சீன நிறுவனங்கள் செய்திருந்த முதலீட்டு அளவு 12,200 கோடி ரூபாயாக இருந்தது. இது மூன்று ஆண்டுகளில் 5 மடங்கு உயர்ந்து 61,000 கோடியாக உள்ளது.
இந்த முதலீடுகள் மீது நடவடிக்கை எடுப்பது இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களையே பாதிக்கச் செய்யும். இருநாட்டு வர்த்தகத்துக்கு தடைவிதித்தால், சீனாவுக்கு 3 சதவீத ஏற்றுமதியும், ஒரு சதவீத இறக்குமதியும் பாதிக்கப்படும். ஆனால், இந்தியாவுக்கு 5 சதவீத ஏற்றுமதியும், 14 சதவீத இறக்குமதியும் பாதிக்கப்படும்.
இந்தியப் பொருட்களையே வாங்க நுகர்வோரை ஊக்குவிக்க முயற்சிக்கலாம். இந்தியாவில் உள்ள சிறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகளை வகுக்கலாம் என்று கூறும் பொருளாதார வல்லுநர்கள், இதன்மூலம், போட்டியிடும் நிலைக்கு இந்தியா வரும் என்று தெரிவிக்கின்றனர்.
நமது அண்டை நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால், சீனாவுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொண்டு, அமெரிக்காவுடன் ராணுவ உறவை வலுப்படுத்துவதே சரியாக இருக்கும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.