இந்தியாவில் கொரோனா பரவல் விதம் குறித்து உள்நாட்டு ஆய்வுகள் தேவை: முன்னாள் எம்.பி. மருத்துவர் செந்தில்

இந்திய தட்பவெப்ப நிலையில் இந்த வைரஸ் மனித உடலுக்கு வெளியில், பொருள்களின் மேல் இது போல நீண்ட நேரம் உயிர் வாழ முடியாமல் போயிருக்கலாம். 

இந்தியாவில் கொரோனா பரவல் விதம் குறித்து உள்நாட்டு ஆய்வுகள் தேவை: முன்னாள் எம்.பி. மருத்துவர் செந்தில்
இந்திய தட்பவெப்ப நிலையில் இந்த வைரஸ் மனித உடலுக்கு வெளியில், பொருள்களின் மேல் இது போல நீண்ட நேரம் உயிர் வாழ முடியாமல் போயிருக்கலாம். 
  • Share this:
இந்தியாவில் நோயின் தீவிரம் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை உள்நாட்டு மருத்துவ ஆய்வுகளின் வாயிலாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்று மருத்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செந்தில் வலியுறுத்தியுள்ளார். 

‘கோவிட்-19 என்னும் கொரோனா நோயின் பரவலைத் தடுப்பதற்காக அரசு அமல்படுத்திய நாடு தழுவிய ஊரடங்கு இருபத்தோரு நாள்கள் முடிவடைந்த நிலையில், மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதனை மேலும் நீட்டிப்பது குறித்து ஏப்ரல் 27 ஆம் தேதி, பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களோடு கலந்தாலோசிக்கவிருக்கிறார். மே மாதம் 3 ஆம் தேதி ஊரடங்கு முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட வாய்ப்பில்லை. சில சேவைகளுக்கும், பணிகளுக்கும் கட்டுப்பாடு தளர்த்தப்படலாம். சிலவகை போக்குவரத்துக்கள் மட்டும் அனுமதிக்கப்படலாம்.

ஊரடங்குக் காலத்தில் என்ன புது வகையான சமையல்கள் செய்யலாம், எந்த வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம், என்னென்ன உள்ளரங்கு விளையாட்டுகள் விளையாடலாம் என்றெல்லாம் நடுத்தர வர்க்கத்தினரும், வசதி படைத்தவர்களும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் நடிகைகள் வழிகாட்டுகிறார்கள்.


மறுபுறம் இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான தினக்கூலிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், தெருவோர வணிகர்கள் அன்றாடம் காய்ச்சிகள் என்றழைக்கப்படும் சிறுதொழில் செய்பவர்கள் ஆகியோர் வாழ்வு மேன்மேலும் சிரமாகிக்கொண்டே போகிறது. சமூக பாதுகாப்புக்கான கட்டமைப்புகள் மிகவும் பலவீனமாக இருக்கும் நாடு நம் நாடு. அரசு வழங்கும் உதவிப் பணமும், இலவச அரிசியும் அவர்களின் பசியைப் போக்குவதற்கு போதுமானதாக இல்லை என்பதையும், அவை ஒருவேளை உணவுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது என்பதையும் அவர்கள் கண்ணீர் மல்கக் கூறிய காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தோம். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமலும், போதிய உணவு இல்லாமலும், துன்பத்திலும் தங்கள் குடும்பத்தினருக்கு உதவி செய்ய இயலாமலும் எல்லையற்ற துன்பத்தில் உழலுகின்றனர்.

“இதே நிலை நீடித்தால் நாங்கள் மன நோயாளியாக மாறிவிடுவோம் அல்லது குடும்பத்தோடு இறந்துவிடுவோம்" என்று ஒரு தெருவோர வணிகர் கூறியது தான் இந்தியாவில் வாழும் விழிம்பு நிலை மக்களின் உண்மை நிலை. ஊரடங்கை மேலும் நீட்டிப்பது இவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடும்.

இந்தச் சூழலில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்த எந்த முடிவையும், வலுவான உள்நாட்டு அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையிலேயே எடுக்க வேண்டும். நம் நாட்டில் எடுக்கப்படும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், சீனா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகிய நாடுகளின் மாதிரியைப் பின்பற்றியே நடைபெறுகின்றன. நம் நாட்டில் கோவிட்-19 வைரஸின் பரவலும், நோயின் தீவிரமும் மற்ற நாடுகளைப் போல இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி அன்று முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். இதுவரை 23,077 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. 718 பேர் இறந்து போயிருக்கிறார்கள். அமெரிக்க நாட்டில் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி அன்று. இன்றுவரை 8,24,730 பேருக்கு அந்நோய்த் தொற்று பரவியிருக்கிறது. 40,450 பேர் அந்நோயினால் இறந்து போயிருக்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் பரவலும், நோயின் தீவிரமும் குறைவாக இருப்பதற்கு அரசின் நடவடிக்கைகளை மட்டும் காரணமாகக் கூறிவிடமுடியாது. இத்தாலி நாடு ‘80 வயதுக்கு மேல் உள்ளவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வரவேண்டாம்’ என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதற்குக் காரணம் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் செயற்கை சுவாசக் கருவிகள் அந்நாட்டில் இல்லை என்பதாகும். இந்தியாவில் கொரோனா நோய் சிகிச்சைக்காக பெரும் எண்ணிக்கையில் செயற்கை சுவாசக் கருவிகளுக்கான தேவை ஏற்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். இந்தியாவில் வைரஸ் பரவலும், தீவிரமும் குறைவாக இருப்பதற்கு பின்வருவன காரணங்களாக இருக்கலாம்:

1. பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் நம் நாட்டில் பிசிஜி தடுப்பூசி போடப்படுகிறது. பிசிஜி தடுப்பூசி போடப்பட்டதனால் காச நோய்க்கு எதிரான எதிர்ப்புச் சக்தியுடன், கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியும் உருவாகி இருக்கலாம்.

2. இந்தியாவில் டெங்கு வைரஸ் பரவலாக இருக்கிறது. டெங்கு நோய்க்கு எதிராக உருவாகும் எதிர்ப்புச் சக்தி கொரோனாவுக்கு எதிராகவும் பாதுகாப்பு அளிக்கலாம்.

3. இந்தியாவைப் போலவே மலேரியா நோய் பரவலாக இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளிலும், இதேபோல கொரோனா தொற்று குறைவாக இருப்பது கவனிக்கப்பட வேண்டியது.

4. கொரோனா பெரும் தொற்றாக மாறியதற்கான காரணங்களில் ஒன்று. இந்த வைரஸ் மனித உடலுக்கு வெளியே கண்ணாடி, உலோகம், காகிதம் போன்ற பொருள்களின் மேல் 72 மணி நேரம் வரை உயிர் வாழக் கூடியது என்பது ஆகும். இந்திய தட்பவெப்ப நிலையில் இந்த வைரஸ் மனித உடலுக்கு வெளியில், பொருள்களின் மேல் இது போல நீண்ட நேரம் உயிர் வாழ முடியாமல் போயிருக்கலாம்.

இந்தக் கருத்துகள் எதுவும் உறுதி செய்யப்பட்டவை அல்ல. இந்தியாவில் நோயின் தீவிரம் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை உள்நாட்டு மருத்துவ ஆய்வுகளின் வாயிலாகக் கண்டுபிடிக்க வேண்டும். நோய்த் தொற்று பரவலுக்கான நடவடிக்கைகளையும் நமது ஆய்வுகளின் அடிப்படையில் வகுக்க வேண்டும்.

ஊரடங்கு நடவடிக்கைகளால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்புகள் பல லட்சம் கோடி ரூபாய்கள் என கூறப்படுகிறது. சில புள்ளி விவரங்கள், ஊரடங்கு காரணமாக 14 கோடி மக்கள் வேலையின்றித்  தவிப்பதாக கூறுகின்றன. உண்மை நிலவரம் இதைவிட இரண்டு மடங்கு எண்ணிக்கையாக இருக்கக்கூடும்.
கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பை விட நோய் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருந்துவிடக்கூடாது.

மே 3ம் தேதிக்கு பிறகு எடுக்க வேண்டிய நோய் பரவல் தடுப்புக்கான முன்னெடுப்புகள், நம் நாட்டு ஆய்வுகளின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். கொரோனா நோய்த் தொற்று குறித்த மருத்துவ ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளித்து, அதிக நிதி ஒதுக்கி அவற்றை ஊக்குவிப்பது அவசர, அவசியத் தேவை ஆகும்.

- மருத்துவர். இரா. செந்தில்
First published: April 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories