கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஜப்பானில் அதிகரித்து வரும் தற்கொலைகள்: அதிரவைக்கும் ரிப்போர்ட்!

கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஜப்பானில் அதிகரித்து வரும் தற்கொலைகள்: அதிரவைக்கும் ரிப்போர்ட்!

கோப்புப் படம்

கடந்த 2020 ஆம் ஆண்டில் ஜப்பானின் தற்கொலை விகிதம் உயர்ந்தது. தேசிய போலீஸ் அமைப்பின் தரவுகளின்படி கடந்த ஆண்டு மட்டும் 20,919 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜப்பான் நாட்டில் இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட தற்கொலை விகிதம், கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவு முதல் முறையாக அதிகரித்த பின்னர் அந்நாட்டு அரசாங்கம் ஒரு தனிமை அமைச்சரை (Minister of Loneliness) நியமித்துள்ளது. அந்நாட்டின் பிரதமர் யோஷிஹைட் சுகா (Yoshihide Suga), அமைச்சர் பொறுப்பை டெட்சுஷி சாகாமோட்டோ (Tetsushi Sakamoto) என்பருக்கு வழங்கினார். அவர் நாட்டின் வீழ்ச்சியடைந்த பிறப்பு விகிதத்தை சமாளிப்பதற்கும், பிராந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சாகாமோட்டோ, "சமூக தனிமை மற்றும் தனிமைப்படுத்தலைத் தடுப்பதற்கும் மக்களுக்கிடையிலான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டில் ஜப்பானின் தற்கொலை விகிதம் உயர்ந்தது. தேசிய போலீஸ் அமைப்பின் தரவுகளின்படி கடந்த ஆண்டு மட்டும் 20,919 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பானில் தற்கொலை விகிதம் அதிகரிப்பதற்கான காரணம் என்ன?

ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்து வருவருவதற்கு நாட்டின் தனிமை கலாச்சாரமும் ஒரு காரணமாக பார்க்கப்படுவதாக பெரும்பாலான நிபுணர்கள் நம்புகின்றனர். ஜப்பான் வயதான மக்கள் அதிகம் வாழும் இடமாக விளங்குகிறது. அந்நாட்டின் மக்கள்தொகையில் 20% க்கும் அதிகமானவர்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர். உலகளவில் அதிக வயதானர்வகள் விகிதம் கொண்ட ஒரே நாடு ஜப்பான். மேலும் நடுத்தர வயது மற்றும் வயதானவர்கள் வாழும் ஒரு பெரிய பகுதி கொண்ட நாடும் ஜப்பான் தான். அங்கு வசிக்கும் பெரும்பாலான வயதானவர்கள் மற்றவருடன் அதிகம் பழகுவதில்லை என்பதால், அவர்களில் பலர் தனியாகவே இறந்துவிடுகிறார்கள்.

இறந்த நீண்ட காலத்திற்குப் பிறகே அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த நிகழ்வு ‘கோடோகுஷி’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது ‘தனிமையான மரணம்’. மறுபுறம் உலகின் மிக நீண்ட வேலை நேரங்கள் கொண்ட நாடாகவும் ஜப்பான் விளங்குகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள மக்கள் தங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவழிக்கவோ அல்லது அவர்கள் விரும்பும் பொழுதுபோக்குகளில் ஈடுபடவோ வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதுவே ஜப்பானிய தொழிலாளர் சட்டங்கள் கூறுவதாவது, ஊழியர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 8 மணிநேரம், வாரத்தில் 40 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அங்குள்ள உண்மை நிலையோ வேறு. கடந்த 2016 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு அரசாங்க கணக்கெடுப்பின் போது, ​​25%-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஒவ்வொரு மாதமும் 80 மணிநேர கூடுதலாக வேலையில் ஈடுபடுத்துவது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கூடுதல் மணிநேரங்களில் ஊழியர்களுக்கு பெரும்பாலும் பணம் செலுத்தப்படுவதில்லை. இதன் காரணமாகவே, ஜப்பானில் திடீர் தொழில் இறப்புகளும் ஏற்படுகின்றன. இதனை ‘கரோஷி’ என்று அழைக்கின்றனர். அதாவது அதிக வேலை காரணமாக மரணம். பொழுதுபோக்குக்கு எந்த நேரமும் இல்லாமல் நீண்ட நேரம் பணியில் இருப்பது பெருமளவில் மகிழ்ச்சியற்ற மக்கள்தொகையை உருவாக்கியுள்ளது என நிபுணர்கள் கூறியுள்ளனர். இது போன்ற விஷயங்களால் ஏற்படும் மீள முடியாத மனஅழுத்தங்கள் காரணமாக மக்கள் தற்கொலை முடிவுகளை கையில் எடுக்கின்றனர்.

தற்கொலை விகிதங்கள் அதிகரிப்பதற்கு ஜப்பானின் தனிமை கலாச்சாரம் தான் காரணமா?

உண்மையில், சுய-தனிமைப்படுத்தும் கலாச்சாரம் தான் அந்நாட்டில் தற்கொலையின் இத்தகைய உச்சநிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அந்நாட்டில் வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் பல ஆண்டுகளாக முழுமையான சுய-தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாசத்தில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நவீனகால வாழ்க்கைமுறையை ‘ஹிகிகோமோரி’ என்று அழைக்கின்றனர். இந்த சொல் 1998 இல் ஜப்பானிய மனநல மருத்துவர் பேராசிரியர் தமாகி சைட்டோவால் உருவாக்கப்பட்டது. சமீபத்தில் கூட ஜப்பானில் கேம் டெவலப்பராகவும், பிரபலமான யூடியூப் சேனலை நடத்தி வரும் நிதோ சவுஜி, கடந்த 10 ஆண்டுகளாக தனது குடியிருப்பை விட்டு வெளியேறவில்லை என்ற செய்தி வெளிவந்தது.

‘ஹிகிகோமோரி’ என்றால் இடஞ்சார்ந்த, சமூக மற்றும் உளவியல் ரீதியாக முழுமையாக தனிமைப்படுத்திக்கொள்வது என்று அர்த்தம். பெரும்பாலும் அந்நாட்டு மக்கள், அவர்களின் கல்வி தகுதிகளை நிறைவேற்றத் தவறுவதாலோ அல்லது வேலைகளைப் பெறுவதில் தோல்வியடைவதாலும் தனிமையில் இருக்கத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து தனிமையை மகிமைப்படுத்த முற்படும் இந்த கலாச்சாரத்தில், மன உளைச்சலில் இருக்கும் மக்களைச் மீட்பதோ அல்லது பிறரிடம் உதவியை நாடுவது என்பது பெரும்பாலும் மிகவும் கடினமாகிவிடும். இதனால் தற்கொலை சம்பவங்கள் கட்டாயம் அதிகரிக்கிறது.

தற்கொலை நெருக்கடியை மிகவும் மோசமாகிய தொற்றுநோய்:

தொற்றுநோயால் ஏற்பட்ட வேலை இழப்புக்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக வீட்டில் இருந்தபடி வேலை செய்யும் கலாச்சாரம் இன்னும் தற்கொலை நெருக்கடியை மோசமாக்கியது. ஆண்களை விட அதிகமான பெண்கள் வேலை இழந்துவிட்டனர். வேலைவாய்ப்பைப் பெற்ற மற்ற பெண்கள் வீட்டு வேலைகள் மற்றும் குழந்தை பராமரிப்புடன் அலுவலக பணிகளை சமப்படுத்த சிரமப்பட்டனர்.

Also read... கொரோனாவில் இருந்து மீண்ட பாதிக்கும் மேற்பட்டோருக்கு இதய பாதிப்பு உள்ளது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கடந்த ஆண்டு நிப்பான் ஹோசோ கியோகை (NHK) வெளியிட்ட ஒரு ஆய்வில், ஏப்ரல் முதல் 26% பெண் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பிரச்சினைகளை சந்தித்து இருப்பதாகக் கண்டறிந்தனர். இது 19% ஆண்களுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம். அதேபோல NHK ஆல் நடத்தப்பட்ட ஒரு தனி வாக்கெடுப்பில், 19% ஆண்களுடன் ஒப்பிடும்போது, 28% பெண்கள் தொற்றுநோய்களின் போது வீட்டு வேலைகளில் அதிக நேரம் செலவிடுவதாக தெரிவித்தனர். அதே சமயம், கடந்த ஆண்டு ஆண் தற்கொலைகள் வீழ்ச்சியடைந்த போதும், சுமார் 6,976 பெண்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது 2019 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களிலிருந்து கிட்டத்தட்ட 15% அதிகரித்துள்ளது என்று தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 2020 அக்டோபரில் பெண் தற்கொலை விகிதம் 70% அதிகரித்துள்ளது என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மக்களிடையே பரவி உள்ள தனிமை கலாச்சாரம் மற்றும் பெருந்தொற்று சமயத்தில் ஏற்பட்டுள்ள வேலையிழப்பு போன்ற காரணங்களால் மக்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையை மாற்றவே தற்போது அந்நாட்டு அரசாங்கம் தனிமை அமைச்சரை பிரத்தியேகமாக நியமித்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: