Home /News /explainers /

நுண்ணூட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்ட அரிசியை வழங்க அரசு முடிவெடுத்தது ஏன்? முழு விவரம் இதோ..

நுண்ணூட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்ட அரிசியை வழங்க அரசு முடிவெடுத்தது ஏன்? முழு விவரம் இதோ..

அரிசி

அரிசி

மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, 1 கிலோ வழக்கமான அரிசியுடன் 10 கிராம் வலுவூட்டப்பட்ட அரிசி தானியங்கள் கலக்கப்பட வேண்டும்.

கடந்த ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய பிரதமர் மோடி, வரும் 2024-ம் ஆண்டுக்குள் பொது விநியோக அமைப்பு (பிடிஎஸ்) மற்றும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள மதிய உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களின் கீழ், செறிவூட்டப்பட்ட அரிசி (நுண் ஊட்டச்சத்து அரிசி) நாட்டு மக்கள் மற்றும் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என அறிவித்தார்.

நாட்டில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக பெரிய தடையாக ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவே நுண்ணுட்டச்சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். இதன்படி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவாக அளிக்கப்படும் அரிசி இவை தவிர வேறு எந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியும், வரும் 2024-ம் ஆண்டுக்குள் வலுவூட்டப்பட்டதாக இருக்கும்’ என்று பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

செறிவூட்டப்பட்ட அல்லது வலுவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன?

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) வரையறைப்படி, செறிவூட்டப்பட்ட அரிசி என்பது "உணவின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஆரோக்கியத்தை அதிகரிக்கும் காரணங்களுக்காக குறைந்தபட்ச ஆபத்துடன் பொது சுகாதார நலன்களை வழங்க ஒரு உணவில் அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்களை வேண்டுமென்றே அதிகரிப்பது" ஆகும். குறைந்தபட்ச ஆபத்துடன் சீரான ஆரோகிய நன்மைகளை வழங்குவதே இதன் நோக்கம்.வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், அரிசி செறிவூட்டல் என்பது வழக்கமான அரிசியில் நுண்ணூட்டச்சத்துக்களைச் சேர்க்கும் ஒரு செயல்முறையாகும். உணவுத் தேவைகளை மனதில் கொண்டு நுண்ணூட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. நுண்ணூட்டச்சத்துக்கள் சிறிய அளவில் வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய கூறுகளாகும். இவற்றில் மைக்ரோமினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. மைக்ரோமினரல்கள் அல்லது ட்ரேஸ் எலிமெண்ட்களில் குறைந்தபட்சம் இரும்பு, கோபால்ட், குரோமியம், தாமிரம், அயோடின், மாங்கனீஸ், செலினியம், துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் உள்ளிட்டவை அடங்கும்.

அரிசி வலுவூட்டலுக்கு கோட்டிங் மற்றும் டஸ்ட்டிங் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. எனினும் ‘எக்ஸ்ட்ரூஷன்’ அரிசி வலுவூட்டலுக்கு சிறந்த தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. எக்ஸ்ட்ரூடர் இயந்திரத்தைப் பயன்படுத்தி கலவையிலிருந்து வலுவூட்டப்பட்ட அரிசி கர்னல்களை (FRKs) தயாரிப்பது இதில் அடங்கும். வலுவூட்டப்பட்ட அரிசி கெர்னல்கள் (fortified rice kernels) பின் வழக்கமான அரிசியுடன் கலக்கப்பட்டு வலுவூட்டப்பட்ட அரிசி தயாராகிறது.

எக்ஸ்ட்ரூஷன் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது?

இந்த தொழில்நுட்பத்தில் உலர்ந்த அரிசி மாவு நுண்ணூட்டச்சத்துக்களின் ப்ரீமிக்ஸுடன் கலக்கப்பட்டு கூடவே தண்ணீர் சேர்க்கப்படுகிறது.இந்த கலவை பின் ஹீட்டிங் ஜோன்ஸ்களுடன் கூடிய இரட்டை-ஸ்க்ரூ எக்ஸ்ட்ரூடருக்குள் செல்கிறது. இது அரிசியின் வடிவத்திலும், அளவிலும் ஒத்த கெர்னல்களை (தானியங்களை) உருவாக்குகிறது. பின் இந்த கெர்னல்கள் உலர்த்தப்பட்டு, கூல்டு மற்றும் டிரைடு பேக்கேஜ் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. Fortified rice kernels குறைந்தபட்சம் 12 மாதங்கள் ஆயுட்காலம் கொண்டது. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, கெர்னல்களின் நீளம் மற்றும் அகலம் முறையே 5 மிமீ மற்றும் 2.2 மிமீ ஆக இருக்க வேண்டும்.

அரிசியை வலுவூட்ட வேண்டிய தேவை ஏன் ஏற்படுகிறது :

முன்னர் கூறியபடி நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மிக அதிகமாக உள்ளது. இதனிடையே உலகளாவிய பசி குறியீட்டில் (Global Hunger Index), 107 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் உள்ளது, இது 'தீவிர பசி' பிரிவை குறிக்கிறது. இந்த சூழலில் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்து போராடுவதற்கு உணவுகளை வலுவூட்டுவது மிகவும் அவசியமான ஒரு நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்தியாவின் முக்கிய உணவாக இருக்கும் அரசியை, நுண்ணூட்டச்சத்துக்களுடன் வலுப்படுத்துவது ஏழைகளின் உணவை நிரப்புவதற்கான ஒரு விருப்பமாகவும் இருக்கிறது.அரிசியை வலுவூட்டுவதற்கான தரநிலைகள் என்ன?

மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, 1 கிலோ வழக்கமான அரிசியுடன் 10 கிராம் வலுவூட்டப்பட்ட அரிசி தானியங்கள் கலக்கப்பட வேண்டும். FSSAI விதிமுறைகளின்படி 1 கிலோ வலுவூட்டப்பட்ட அரிசியில் பின்வரும் ஊட்டச்சத்துக்கள் இருக்கும்: 28 மிகி - 42.5 மிகி இரும்பு சத்து, 75-125 மைக்ரோ கிராம் ஃபோலிக் அமிலம், 0.75-1.25 மைக்ரோ கிராம் வைட்டமின் பி-12 இருக்க வேண்டும். தவிர 1 கிலோ அரிசியில் 10 மி.கி -15 மி.கி துத்தநாகம், 500-750 மைக்ரோகிராம் RE வைட்டமின் ஏ, 1 மிகி - 1.5 மிகி வைட்டமின் பி-1, 1.25 மி.கி -1.75 மி.கி வைட்டமின் பி-2 , 12.5 மிகி -20 மிகி வைட்டமின்பி-3, மற்றும் 1.5 மிகி -2.5 மிகி வைட்டமின் பி-6 கொண்டும் செறிவூட்டலாம்.

வலுவூட்டப்படும் அரிசிக்காகும் உற்பத்தி செலவு :

இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி -12 ஆகிய மூன்று நுண்ணூட்டச்சத்துக்களுடன் FRK உற்பத்தி செலவு ஒரு கிலோவுக்கு சுமார் ரூ .0.60 ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவை மத்திய மற்றும் மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளும். இந்த நடைமுறைக்கு ஆகும் செலவை, அரிசி ஆலைகளுக்கு அரசே வழங்கி விடும்.

வலுவூட்டப்பட்ட அரிசியை வித்தியாசமாக சமைக்க வேண்டுமா?

இல்லை, வலுவூட்டப்பட்ட அரிசியை சமைப்பதற்கு எந்த சிறப்பு நடைமுறையும் தேவையில்லை. அரிசியை சமைப்பதற்கு முன் சாதாரண முறையில் சுத்தம் செய்து கழுவ வேண்டும். சமைத்த பிறகு, வலுவூட்டப்பட்ட அரிசி சமைப்பதற்கு முன்பு இருந்த அதே நுண்ணூட்டச்சத்து அளவுகளை கொண்டிருக்கும்.

வலுவூட்டப்பட்ட அரிசியை அடையாளம் காண்பது எப்படி?

நீங்கள் வாங்குவது சாதாரண அரிசியா அல்லது செறிவூட்டப்பட்ட அரிசியா என்பதை எளிதாக அடையாளம் காணலாம். வலுவூட்டப்பட்ட அரிசி அடைக்கப்பட்டுள்ள பைகளில் (‘+F’) என்ற லோகோவும் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12 உடன் வலுவூட்டப்பட்டது” ஆகிய வரியும் கட்டாயம் அச்சிடப்பட்டிருக்கும்.ஏற்கனவே நடைமுறையில் உள்ளதா?

2019-20ம் ஆண்டில் அமைச்சகம் மத்திய நிதியுதவி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அரிசி வலுவூட்டல் மற்றும் பிடிஎஸ் கீழ் அதன் விநியோகம்’, என்ற இந்த திட்டம், மூன்று வருடங்களுக்கு மொத்த பட்ஜெட் செலவினம் 174.64 கோடி செலவில் துவக்கப்பட்டது.15 மாநிலங்களில் 15 மாவட்டங்களில் குறிப்பாக ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, குஜராத், உத்தரப் பிரதேசம், அசாம், தமிழ்நாடு, தெலுங்கானா, பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம ஆகிய மாநிலங்களில் இத்திட்டத்தின் கீழ் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உட்பட ஆறு மாநிலங்கள், மேற்காணும் திட்டத்தின் ஒரு பகுதியாக வலுவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த ஜூன் 2021 வரை சுமார் 2.03 லட்சம் டன் வலுவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட்டது.

வேறு எந்த நாடாவது இதை முயற்சித்துள்ளதா?

அமெரிக்கா, பனாமா, கோஸ்டாரிகா, நிகரகுவா, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சாலமன் தீவுகள் உள்ளிட்ட நாடுகள் வலுவூட்டப்பட்ட அரிசியை கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Rice

அடுத்த செய்தி