நாளுக்கு நாள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தின் எண்ணிக்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதற்கேற்ப ஆண்டுதோறும் சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் படுகாயம் மற்றும் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. ரோட்டில் ஓரமாக நடந்து செல்லும் போது கூட ஏதேனும் வாகனம் வந்து மோதி விபத்துகள் நிகழும் சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. நெடுஞ்சாலை முதல் சாதாரண சிறிய ரோட்டில் கூட அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.
இப்படி விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களை விபத்து ஏற்படுத்துபவர்கள் கண்டுகொள்ளாமல் சம்பவ இடத்திலிருந்து நழுவி விடுவதுண்டு. பின் சம்பவ இடத்திற்கு அருகில் இருப்போர் அடிபட்டவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பார்கள். ஆனால் விபத்தில் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உண்மையிலே யாருடைய பொறுப்பு மற்றும் விபத்தில் சிக்குவோருக்காக என்னென்ன நடைமுறைகள் உள்ளன என்பதை விரிவாக காணலாம்.
நியாயமாக சாலை விபத்துக்கு காரணமான மோட்டார் வாகன ஓட்டுநர் அல்லது உரிமையாளர் காயமடைந்த நபர் உடனடி மருத்துவ கவனிப்பைப் பெற அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
கோல்டன் ஹவர் என்றால் என்ன?
விபத்து நேரிட்டதிலிருந்து அடுத்த 1 மணி நேரம் கோல்டன் ஹவர் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் விபத்தில் சிக்கியவர்கள் படுகாயமடைந்திருந்தாலும் அடுத்த 1 மணி நேரத்திற்குள் முதலுதவி மற்றும் உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைத்தால் அவர் உயிர் பிழைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதால் விபத்து நடந்ததிலிருந்து அடுத்த 1 மணி நேரம் கோல்டன் ஹவர் என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படுகிறது.
கோல்டன் ஹவர் சிகிச்சைக்கு பணம் தேவையா?
மோட்டார் வாகன (திருத்த) சட்டம், 2019 இன் பிரிவு 162 (1)-ன் படி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கோல்டன் ஹவருக்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டால், அவர்களுக்கு பணமில்லாமல் சிகிச்சை அளிக்க வேண்டும்.
விபத்து நேரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு காப்பீடு இல்லையென்றால்?
சட்டப்படி விபத்தை ஏற்படுத்திய கார் உரிமையாளர் / ஓட்டுநர் இழப்பீட்டுத் தொகையுடன் கிளைம்(claim) செலுத்த வேண்டும். இதனால் காப்பீட்டுத் தொகை இருப்பதால் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு காப்பீடு இல்லை என்றாலும் விபத்தை ஏற்படுத்தியவர் மூலம் பலன் கிடைக்கும்.
நண்பரோ அல்லது டிரைவரோ விபத்தை ஏற்படுத்தினால் ஓனர் பொறுப்பாவாரா?
வாகன உரிமையாளரின் நண்பரோ அல்லது டிரைவரோ விபத்தை ஏற்படுத்தி இருந்தால், வாகனத்தை இயக்கியவர் 279,337,338 மற்றும் 304 ஏ ஐபிசி ஆகிய பிரிவின் கீழ் தண்டிக்கப்படுவார். அதே சமயம் மோட்டார் வாகன சட்டம், 1988 இன் கீழ் விபத்தை ஏற்படுத்தியதற்கான அபராதம் கார் உரிமையாளருக்கு விதிக்கப்படும்.
செல்லுபடியாகும் லைசென்ஸ் இல்லாத ஒருவருக்கு உங்கள் வாகனத்தை கொடுத்து விபத்து ஏற்பட்டால்?
இந்த சூழலில் வாகன உரிமையாளர் மற்றும் வாகனத்தை ஒட்டி சென்றவர் என இருவரும் விபத்தினால் ஏற்படும் சேதங்களுக்கும், பொருந்தக்கூடிய சட்டத்தின்படி இழப்பீடுக்கும் பொறுப்பாவார்கள்.
சிறுவர்களால் நேரும் விபத்திற்கு.!
மோட்டார் வாகனங்களை சிறுவர்கள் இயக்குவதால் ஏற்படும் விபத்து குற்றங்களுக்கு வாகனத்தின் உரிமையாளர் அல்லது அந்த சிறுவர்களின் பாதுகாவலர் குற்றவாளி என்று கருதப்படுவார். ஒருவேளை உரிமையாளர் அல்லது பாதுகாவலர் தனக்குத் தெரியாமல் சிறுவன் வாகனத்தை எடுத்து வந்ததாக நிரூபிக்கும்பட்சத்தில், விபத்திற்கான எந்தவொரு பொறுப்பும் உரிமையாளர் அல்லது பாதுகாவலர் மீது வராது.
மேலும் சட்ட பிரிவு 8-இன் கீழ் விபத்தை ஏற்படுத்தும் சிறார் வாகனம் ஓட்ட கற்று கொள்வதற்கான கற்றல் உரிமம் பெற்றிருந்தால் அல்லது கற்றல் உரிமத்தின் கீழ் செயல்பட அனுமதிக்கப்பட்ட ஒரு வாகனத்தை ஓட்டுகிறார் என்றாலும் விபத்திற்கான பொறுப்பு உரிமையாளரின் மீது வராது. சிறார் மீது பொறுப்பு மற்றும் மீறல் குற்றசாட்டு உறுதியானால், அத்தகைய சிறார் சட்டத்தின் படி தண்டிக்கப்படுவார். மேலும் சிறார் நீதிச் சட்டம், 2000 ன் படி எந்தவொரு காவல்துறை தண்டனையும் நிர்வகிக்கப்பட்டு மாற்றப்படும்.
பர்சனல் இஞ்சூரி கிளைம் தாக்கல் செய்ய நீதிமன்றம் செல்ல வேண்டுமா?
விபத்தில் சம்பந்தபட்ட வேறொரு ஓட்டுநரின் காப்பீட்டு நிறுவனம் உங்களது கோரிக்கை நியமானது என்று உங்கள் வழக்கறிஞர் கூறுவதை ஏற்று அந்த இழப்பீடை கொடுக்க ஒப்புக்கொண்டால், அந்த தொகை உங்களுக்கு போதுமானது என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் உங்கள் கிளைம் தீர்க்கப்படாவிட்டால், நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டு தீர்வு பெறலாம்.
Also read... Explainer: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை-யை புதுப்பிக்கும் மோடி..!
குடும்ப உறுப்பினர்கள் விபத்தில் உயிரிழந்தால் மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம், 2019 இன் பிரிவு 140 அல்லது பிரிவு 163 ஏ இன் கீழ் இழப்பீடு கோரலாம்.பிரிவு 140-இன் கீழ் ஒரு நிலையான இழப்பீடு கோரப்படலாம், அதேசமயம் பிரிவு 163 ஏ இன் கீழ், இழப்பீடு சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட ஒரு பார்முலாவால் தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும் பிரிவு 163 ஏ இன் கீழ் மட்டுமே ரூ.5 லட்சத்திற்கும் மேல் இழப்பீடு கோர முடியும்.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் இறந்தால்?
அதிவேகம்/ கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதன் காரணமாக விபத்து ஏற்பட்டது. அதனால் பாதிக்கப்பட்டவர் மரணமடைந்தார் என்றால் இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 304 ஏ இன் கீழ் வாகன ஓட்டுநருக்கு தண்டனை வழங்கப்படும்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.