இங்கிலாந்தின் 57வது பிரதமராக பதவியேற்க உள்ள ரிஷி சுனக் கதை தொடங்கியது எதோ 42 ஆண்டுகளுக்கு முன் சவுத்தாம்ப்டன் பொது மருத்துவமனையில் நடந்தது அல்ல..இங்கிலாந்தில் அவர்களது பாட்டி உழைத்து வளர்க்க தொடங்கிய விருட்சம் இன்று பழம் பெற்றுள்ளது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் அதன் காலனிகளுக்கு இந்தியர்கள் குடிபெயர்ந்தனர். அப்படி பிழைப்பிற்காக கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் குடி பெயர்ந்த குடும்பங்களில் ரிஷியின் குடும்பமும் ஒன்று. ரிஷியின் 3 தலைமுறைக்கு முன்னதாக தான்சானியாவில் உள்ள ஒரு குடிசையில் ஸ்வாஹிலி மொழியில் வளர்ந்த ரிஷியின் பாட்டி - ஒரு சிறிய பஞ்சாபி சமூகத்தில் வாழ்ந்து வந்தார்.
1966 ஆம் ஆண்டில், இங்கிலாந்திற்கு ஒரு வழி டிக்கெட் வாங்குவதற்காக தனது திருமண நகைகளை விற்க தைரியமான முடிவை எடுத்தார். தன் கணவனையும் சிறு குழந்தைகளையும் விட்டுவிட்டு, லெய்செஸ்டருக்குச் சென்று புத்தகக் காப்பாளராக வேலை பார்த்தார். ஒரு வருடம் கழித்து, காசை சேமித்து தனது கணவரையும் குழந்தைகளையும் இங்கிலாந்திற்கு அழைத்து வந்து குடியேறினர்.
இன்று நிகழும் பகுதி நேர சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டுமா... லடாக்கில் இருந்து நேரடி ஒளிபரப்பு
ரிஷியின் தாயார் உஷா, பள்ளியில் கடுமையாக உழைத்து ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றார், அங்கு அவர் மருந்தியல் படித்தார். பின்னர் அவர் குடும்ப நண்பர்கள் மூலம் மருத்துவ மாணவர் யாஷ்வீரை சந்தித்தார். அவர்கள் 1977 இல் திருமணம் செய்து, சவுத்தாம்ப்டனுக்கு குடிபெயர்ந்தனர்.
அவர் ஓய்வு பெற்ற பின்பு பல தசாப்தங்களாக சுனக் பார்மசி என்ற சிறிய கடையை உஷா நடத்தி வந்தார். அவர்களது குடும்பம் பல வெற்றிகரமான சிறு வணிகங்களை செய்து வந்தனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள்: ரிஷி - மூத்தவர். இரண்டாவது மகன் சஞ்சய், இப்போது மருத்துவ உளவியலாளர் மற்றும் நரம்பியல் நிபுணராக இருக்கிறார். மகள் ராக்கி UN இல் பணிபுரிகிறார்.
ரிஷி அவரது டீன் ஏஜ் பருவத்தில், தனது சைக்கிளில் வாடிக்கையாளர்களுக்கு மருந்துகளை டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். அதன் பின்னர், ஏ-லெவல் பொருளாதாரம் ஆக்ஸ்போர்டில் படித்த பிறகு, கோல்ட்மேன் சாக்ஸில் மதிப்புமிக்க பட்டதாரி வேலை செய்வதற்கு லண்டனுக்கு குடிபெயர்ந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2005 இல் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டில் MBA படிப்பதற்காக ஃபுல்பிரைட் உதவித்தொகையைப் பெற்றார்.
அங்கு, இந்தியாவின் பில்கேட்ஸ் என்று அழைக்கப்படும் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை சந்தித்தார். படிப்போடு சேர்ந்து காதலும் மலர்ந்தது. நாராயண மூர்த்தி, 1980 களின் முற்பகுதியில் இன்ஃபோசிஸ் என்ற மென்பொருள் நிறுவனத்தை நிறுவி இப்போது நாட்டின் ஆறாவது பணக்காரராக உள்ளார்.
2009 ஆம் ஆண்டு ரிஷி உடனான திருமணத்தில், பெங்களூரில் நடந்த இரண்டு நாள் விருந்தில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அனில் கும்ப்ளே உட்பட பிரபலங்களுடன் 1,000 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
சுனக் முதன்முதலில் 2015 இல் யார்க்ஷயரின் ரிச்மண்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற உறுப்பினரானார். பின்னர் பிப்ரவரி 2020 இல் அவர் கருவூலத்தின் அதிபராக நியமிக்கப்பட்டார், இது மிக முக்கியமான UK அமைச்சரவை பதவியாகும்.
தம்பதியினர் லாஸ் ஏஞ்சல்ஸின் கடற்கரைப் புறநகர்ப் பகுதியில் சாண்டா மோனிகாவுக்குச் சென்றனர். அங்கு ரிஷி தெலேம் பார்ட்னர்ஸ் என்ற முதலீட்டு நிறுவனத்தை நிறுவ உதவினார்.குடும்பத்தோடு விடுமுறையில் தங்க பசிபிக் பெருங்கடலின் பரந்த காட்சியைக் காண £5.5 மில்லியன் மதிப்புள்ள பென்ட்ஹவுஸ் ஒன்றை வைத்திருக்கிறார்.
ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்க உள்ளதால் வெள்ளையர் அல்லாத அரசியல்வாதியால் வழிநடத்தப்படும் முதல் பெரிய ஐரோப்பிய நாடு இங்கிலாந்து தான் என்ற நிலை ஏற்படவுள்ளது. புனித சமஸ்கிருத நூலான பகவத் கீதை மீது உறுதிமொழி ஏற்று பாராளுமன்றப் பிரமாணம் எடுக்கும் முதல் பிரதமர் ரிஷியாக இருப்பார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Prime minister, Rishi Sunak, UK