ராஜ்யசபாவில் அடுத்த எதிர்கட்சித் தலைவர்: யார் இந்த மல்லிகார்ஜூன கார்கே?

ராஜ்யசபாவில் அடுத்த எதிர்கட்சித் தலைவர்: யார் இந்த மல்லிகார்ஜூன கார்கே?

மல்லிகார்ஜூன் கார்கே

1972ம் ஆண்டு முதல் தேசிய அரசியலில் அடியெடுத்து வைக்கும் வரை அமைந்த ஒவ்வொரு காங்கிரஸ் அரசிலும் இவர் அமைச்சராக இருந்துள்ளார்.

  • Share this:
மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத் வரும் பிப்ரவரி 15ம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில் அடுத்த மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவரான சோனியா காந்தி மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடுவிற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

நேரு குடும்பத்தின் தீவிர விசுவாசி, பட்டியலின தலைவர், 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட பழுத்த அரசியல்வாதியான மல்லிகார்ஜூன் கார்கேவை மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு எதிரான தாக்குதலை தொடுக்க காங்கிரஸ் கட்சி தேர்வு செய்ததற்கான காரணமும், பின்னணியும் என்ன என்பதை தற்போது அறிந்து கொள்வோம்.

ஒரு குட்டி கதை:

2004ம் ஆண்டு அப்போதைய கர்நாடக முதல்வர் எஸ்.எம்,கிருஷ்ணா தலைமையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக பாஜகவை ஆட்சிக்கு வராமல் செய்யும் பொருட்டு முன்னாள் பிரதமர் தேவேகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் முடிவு செய்தது. தரம் நாராயண் சிங்கை முதல்வராக்க காங்கிரஸ் முடிவு செய்தது. எஸ்.எம்,கிருஷ்ணா அரசில் நம்பர் 2வாக விளங்கிய மல்லிகார்ஜூன கார்கேவுக்கு காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி தரம் நாராயண் சிங் அரசில் எந்த அமைச்சர் பொறுப்பையும் ஏற்க மாட்டேன் என தெரிவித்துவிடுமாறு கார்கேயின் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இருப்பினும் கட்சிக்கு எதிராக எந்த முடிவையும் எடுக்க மாட்டேன், நேரு குடும்பத்தின் கடைசி ஆதரவாளராகவும் விளங்குவேன் என அவர்களிடம் மறுத்துவிட்டு சத்தமில்லாமல் தனக்கு அளிக்கப்பட்ட அமைச்சர் பொறுப்பை ஏற்றார் கார்கே. தனக்கான வாய்ப்பு நிச்சயம் ஒரு நாள் வரும் என அவரின் நண்பர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார் கார்கே.

கைகூடாத முதல்வர் பதவி:

2008-ல் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் எதிர்கொண்டது. கர்நாடகாவின் முதல்வராக அதுவே அவருக்கு சிறந்த வாய்ப்பாகவும் இருந்தது. இருப்பினும் எடியூரப்பாவின் தலைமையில் களமிறங்கிய பாஜகவிடம் கார்கே தோல்வியை தழுவியதுடன் எதிர்கட்சித் தலைவராக அமர்ந்தார்.

மல்லிகார்ஜூன் கார்கே


கர்நாடக அரசியலில் உயர்மட்ட தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூன கார்கே பட்டியலினத்தை சேர்ந்தவர். Gulbarga என்ற மிகவும் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த கார்கேவின் தந்தை ஒரு மில் தொழிலாளி, தன் சொந்த முயற்சியில் கார்கே அரசியலில் வளர்ந்தார்.

1972ம் ஆண்டு தனது முதல் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர், கடந்த 49 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நேரு குடும்பத்தின் தீவிர விசுவாசியாக கார்கே விளங்கினார். தனது விசுவாசம், பொறுமை, நிர்வாக அனுபவம் மற்றும் எந்த சூழலையும் கையாளும் திறன் ஆகிய குணங்களால் அவர் கட்சியில் மெல்ல மெல்ல வளர்ந்தார்.

ஆவேச பேச்சு:

தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் அமைதியான நபராக அறியப்படும் கார்கே, யாராவது தலித் தலைவர் என கூறினால் ஆவேசமடைவதை பார்க்க முடியும்.

“நான் ஒரு தலித். அது உண்மைதான். நான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு காரணம் என்னுடைய கடின உழைப்பு மட்டுமே. ஒவ்வொரு மதமும், ஒவ்வொரு சாதியும் எனக்கு உறுதுணயாக இருந்தது. என்னை காங்கிரஸ் தலைவர், மக்கள் தலைவர் என்று அழையுங்கள். நான் தலித் தலைவர் மட்டுமல்ல, அப்படி அழைப்பது எனக்கு அவமானம். நான் பெரிய ஒன்றுக்கு தகுதியானவன், ஏனென்றால் நான் திறமையானவன், நான் தலித் என்பதால் அல்ல,” இவ்வாறு பலமுறை கார்கே பேசியிருக்கிறார்.2014ல் நரேந்திர மோடி பிரதமரான போது காங்கிரஸ் கட்சி மிகப்பெரும் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக அக்கட்சியால் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற முடியாமல் போனது. இதனால் மல்லிகார்ஜூன கார்கே மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆக்கப்பட்டார். தலித் என்பதாலேயே காங்கிரஸ் அவரை இப்பதவியில் அமரவைத்துள்ளது என விமர்சனங்கள் எழுந்தன. தன் மீதான விமர்சனக்களை தவிடுபொடியாக்கிய கார்கே, அவரின் அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள் காரணமாக பிரதமர் மோடியாலேயே பாராட்டப்பட்டார். மேலும் சோனியா, ராகுல் இருவரின் அபிப்ராயத்தையும் பெற்றார்.

சிறந்த நிர்வாகி:

அடிப்படையில் ஒரு வழக்கறிஞரான மல்லிகார்ஜூன கார்கே, 1972ல் தனது 27 வயதில் கர்நாடக சட்டமன்ற உறுப்பினரானார். இளம் மல்லிகார்ஜூன கார்கேயின் செயல்பாடுகளை கண்டு வியந்த அப்போதைய முதல்வர் தேவராஜ் அர்ஸ், இவரை அமைச்சராக்கினார். அப்போதைய பெருந்தலைவர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, பங்காரப்பா, வீரப்ப மொய்லி, ரங்கநாத், கோர்பதே உள்ளிட்டோர் இவரின் அமைச்சரவை சகாக்களாக இருந்தனர்.

1972ம் ஆண்டு முதல் தேசிய அரசியலில் அடியெடுத்து வைக்கும் வரை அமைந்த ஒவ்வொரு காங்கிரஸ் அரசிலும் இவர் அமைச்சராக இருந்துள்ளார். இதுவே காங்கிரஸ் கட்சியில் அவருக்கான இடத்தை எடுத்துரைப்பதாக அமைகிறது.

நேரு குடும்ப விசுவாசி:

இந்திரா காந்தி காலத்தில் கர்நாடகாவில் இளம் தலைவராக இருந்த கார்கே, ராஜீவ் காந்தி காலத்தில் மத்திய ரக தலைவராக உயர்ந்தார். 1990க்கு பிறகு உயர்மட்ட தலைவராக கார்கே உயர்ந்தார். நேரு குடும்பத்தின் மீது அவர் காட்டிய விசுவாசம் அரசியலில் கடுமையான நேரங்களில் அவர் கரை சேர உதவியது.

கடந்த 50 ஆண்டுகளில் நேரு குடும்பத்தை விமர்சித்து கார்கேவை பேசவைக்க காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் பலவாறு முயற்சித்தும் அவர் வாய் திறக்கவில்லை. உட்கட்சி பூசலுக்கு எப்போதும் அவர் இரையாகவில்லை. இதுவே அவரின் சிறப்பம்சமாக பார்க்கப்பட்டது.

மல்லிகார்ஜூன் கார்கே


பல்வேறு உயர் பதவிகள்:

சிறந்த நிர்வாகத்திறன் கொண்ட கார்கே மாநிலத்திலும், மத்தியிலும் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர், எதிர்கட்சித் தலைவர், மத்திய அரசில் பல முக்கிய துறைகளை அமைச்சராக ஏற்று நடத்தியது, காங்கிரஸ் பொதுச் செயலாளர் போன்றவை அவற்றுள் சில.

மதச்சார்பற்ற ஜனதா தலைவர் சித்தராமையாவை கட்சிக்குள் கொண்டு வரும் முடிவு தனக்கான முதலமைச்சர் கனவை தவிடுபொடியாக்கும் என தெரிந்தும் கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு அதனை ஏற்றார். சித்தராமையாவுக்கு வழிவிடும் பொருட்டு காங்கிரஸ் தலைமை 2009ம் ஆண்டு மல்லிகார்ஜூன கார்கேவை மத்திய அமைச்சர் ஆக்கியது. தனக்கு இதில் ஆர்வமே இல்லை என்றாலும் கட்சியின் முடிவை ஏற்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் ஆனதுடன் அந்த பொறுப்பையும் சிறப்பாக ஏற்று நடத்தி பாராட்டு பெற்றார்.

புத்தர் மற்றும் அம்பேத்கரிய சிந்தனைகள் மீது நம்பிக்கை கொண்ட பகுத்தறிவாளர்.

மல்லிகார்ஜூன் கார்கே


ஒரே தோல்வி:

1972 முதல் 2008 வரை 9 முறை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் தோல்வியையே சந்திக்காமல் வெற்றியை ருசித்தவர். அதன் பிறகு இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

2019-ல் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் தான் மல்லிகார்ஜூன கார்கே தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு 2020ல் அவர் மாநிலங்களவைக்கு தேர்வானார்.

எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசத்தை வைத்திருக்கும் நேரு குடும்பம், இப்போது அவரை மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக்கி, அவர் தோள் மீது என்னற்ற பொறுப்புகளை பாரமாக சுமத்தியுள்ளது.

கர்நாடக முதலமைச்சர் என்ற விருப்பமான பதவி பல தசாப்தங்களாக கார்கேவைத் தவிர்த்துவிட்டது. மாநிலத்தில் புதிய, மிகவும் இளைய தலைவர்கள் தோன்றுவதால், அது எப்போதும் அவருக்கு ஒரு கனவாகவே இருக்கலாம். ஒரு நடைமுறை அரசியல்வாதியான கார்கேவுக்கு அது நன்றாகத் தெரியும்.

கொசுறு தகவல்:

1969ம் ஆண்டு தொடங்கி மாநிலங்களவையின் 17 வது எதிர்கட்சித் தலைவராக மல்லிகார்ஜூன பொறுப்பேற்க உள்ளார். மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ஜஸ்வந்த் சிங் ஆகியோர் இப்பதவியை அலங்கரித்திருக்கின்றனர். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு முன்னதாக இப்பதவியில் உள்ள குலாம் நபி ஆசாத் தான் இதுவரை இருந்த எதிர்கட்சித் தலைவர்களில் மிக நீண்ட காலம் ( 6 ஆண்டுகள் 9 மாதம்) இருந்தவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
Published by:Arun
First published: